search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்-  ராமதாஸ் வலியுறுத்தல்
    X

    சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

    எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகளை மக்கள் அறிந்துகொள்ள சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். #Ramadoss #TNAssembly
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் பிரதிநிதிகளின் அவையான சட்டசபையில் நடைபெறும் விவாதங்கள் அனைத்தையும் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டியது மக்களின் உரிமை ஆகும். பேரவையில் நடப்பதை அவர்கள் பார்த்து தெரிந்துகொண்டால் தான், தாங்கள் சரியான நபர்களைத் தான் தேர்ந்தெடுத்துள்ளோமா? என்பது குறித்து தன்னாய்வு செய்துகொள்வதற்கும், அடுத்து வரும் தேர்தலில் சரியான நபர்களை தேர்வு செய்யவும் வாய்ப்பு ஏற்படும்.

    இதற்கு சட்டசபை நிகழ்ச்சிகள் அனைத்தும் முழுமையாக நேரலை செய்யப்பட வேண்டியது அவசியமாகும். அதை செய்ய அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது.

    அவை நிகழ்ச்சிகள் அனைத்தும் இப்போதும் ஒளிப்பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், ஆளுங்கட்சிக்கு சாதகமான பகுதிகள் மட்டுமே ஊடகங்களுக்கு அனுப்பி ஒளிபரப்பச் செய்யப்படுகின்றன. இதனால் ஆளுங்கட்சியினரின் தவறுகள் வெளியில் வராமல் மறைக்கப்படுகின்றன. அவை நிகழ்ச்சிகளை நேரலை செய்வதில் அரசுக்கு தயக்கம் ஏன்? என்பது தெரியவில்லை.

    அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கப்பட்டபோது, அதன்வழியாக தமிழக சட்டசபை நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் 7 ஆண்டுகள் ஆன பிறகும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.



    நாட்டில் பல மாநிலங்களில் அவை நிகழ்ச்சிகள் நேரலை செய்யப்படுகின்றன. இன்னும் பல மாநிலங்களில் அவை நிகழ்ச்சிகள் முழுமையாக பதிவு செய்து ஊடகங்களுக்கு வழங்கப்படுகின்றன. சில மாநிலங்களில் ஊடகங்களே ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் தான் சட்டசபை ஜனநாயகம் குரல்வளை நெரிக்கப்பட்டு உயிருக்கு போராடுகிறது.

    சட்டசபை நிகழ்ச்சிகள் நேரலை செய்யப்படும்போது உறுப்பினர்களின் செயல்பாடுகளை மக்கள் அறிந்துகொள்ள முடியும் என்பது ஒருபுறமிருக்க, உறுப்பினர்களும் மிகவும் பொறுப்புடன் செயல்படுவர். எனவே, அடுத்தக் கூட்டத்தொடரில் இருந்தாவது சட்டசபை நிகழ்ச்சிகளை மக்கள் பார்த்து அறிவதற்கு வசதியாக அவை நிகழ்ச்சிகளை நேரலை செய்ய சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Ramadoss #TNAssembly
    Next Story
    ×