search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் பார்வைக் குறைபாடு நோய்களை எதிர்கொள்வது சவாலாக இருக்கும்- வெங்கையா நாயுடு
    X

    இந்தியாவில் பார்வைக் குறைபாடு நோய்களை எதிர்கொள்வது சவாலாக இருக்கும்- வெங்கையா நாயுடு

    இந்தியாவில் பார்வைக் குறைபாடு நோய்களை எதிர்கொள்வது சவாலாக இருக்கும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார். #VicePresident #VenkaiahNaidu
    சென்னை:

    இந்திய உள்விழி உட்பொருத்தல் மற்றும் ஒளிக்கதிர் விலக்க அறுவை சிகிச்சை மாநாடு (ஐ.ஐ.ஆர்.எஸ்.ஐ.) சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று நடந்தது. இந்த மாநாட்டின் கருத்தரங்கத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தொடங்கி வைத்து பேசியதாவது:-


    ஆத்மாவின் ஜன்னல் என்று கண்களை கூறுகிறோம். எனவேதான் கண்ணில் பிரச்சினை என்றால் அதை குணமாக்குவதற்கு நல்ல சிகிச்சை முறை அவசியமாகிறது. உலக அளவில் பார்வையற்றோரின் எண்ணிக்கை 3 கோடியே 60 லட்சமாக உள்ளது. 21 கோடியே 70 லட்சம் பேருக்கு கடுமையான பார்வைக் குறைபாடுகள் உள்ளன. 25 கோடியே 30 லட்சம் பேர் பாதியளவில் பார்வையற்றவர்களாக உள்ளனர்.

    இந்தியாவைப் பொறுத்த அளவில் 2020-ம் ஆண்டில் 82.50 லட்சம் பேர் கண்புரை விழுந்தவர்களாக இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 1950-ம் ஆண்டுகளில் டார்ச் லைட் அடித்து கண் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இருந்து தற்போது மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறோம்.

    சர்க்கரை நோயாலும் 20 முதல் 64 வயதுக்குட்பட்ட பலருக்கு பார்வைக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. இளைஞர்கள், பள்ளிக் குழந்தைகளும் கண்ணாடிகள் அணியும் அளவுக்கு பார்வைக் குறைபாடுகள் இருக்கின்றன என்பதுதான் வேதனை.

    வீடியோ கேம், செல்போன், கம்ப்யூட்டர், டி.வி. போன்றவை கண் ஆரோக்கியத்துக்கு அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உலகத்தின் சர்க்கரை நோயின் தலைநகரமாக இந்தியா இருக்கிறது. இங்கு 5 கோடி பேர் சர்க்கரை நோயின் 2-ம் நிலையை அடைந்துள்ளனர். எனவே பார்வை குறைபாடு சிகிச்சையில் இந்தியா எதிர்கொள்ள இருக்கும் சவால்களை கற்பனை செய்ய முடிகிறது.

    கண் சிகிச்சைக்கான சேவை அளிப்பதில் மத்திய அரசு மட்டுமே பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாது என்பதால் உள்ளாட்சி அமைப்புகள், தனியார், என்.ஜி.ஓ.க்கள் ஆகியோரும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். கண் நோய் வராமல் தடுப்பது மற்றும் சிகிச்சை அளிப்பதை இன்னும் பலப்படுத்துவதற்காக பல்நோக்கு திட்டங்களை உருவாக்குவது அவசியம்.

    கண் தானம் செய்வதை ஊக்கப்படுத்த வேண்டும். 2017-18-ம் ஆண்டில் கண் தானத்தின் இலக்கை 50 ஆயிரம் என்று என்.பி.சி.பி. நிர்ணயித்து இருந்தாலும், நம்மால் 69 ஆயிரத்து 343 கண்களைப் பெற முடிந்தது சாதனையே.

    பெறப்பட்ட கண்களை பாதுகாத்து, அவற்றை பொருத்தும் விஷயத்தில் தரமான பயிற்சியை அது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வழங்குவது அவசியம். கண் தானம் பற்றிய உணர்வை பள்ளிக் குழந்தைகளின் மனதிலேயே விதைக்க வேண்டும்.

    கிராமப்புறங்களில் வசிக்கும் பலருக்கு தரமான கண் சிகிச்சை தேவைப்படுகிறது. தனியார் ஆஸ்பத்திரிகள் வழங்கும் சிகிச்சைகளுக்கு அவர்களால் செலவிட முடியாது. எனவே பொது கண் மருத்துவமனைகளை நவீன வசதிகளைக் கொண்டதாக உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் முக்கிய உரையாற்றினார். மாநாட்டு பொதுச்செயலாளர் அமர் அகர்வால் வரவேற்றார். மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    முன்னதாக அமர் அகர்வால் எழுதிய புத்தகத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார். இஸ்ரேல், அமெரிக்கா, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளில் கண் அறுவை சிகிச்சையில் சிறந்த சேவை ஆற்றிய அந்த நாட்டு டாக்டர்களுக்கு தங்கப் பதக்கத்தை வெங்கையா நாயுடு வழங்கினார். #VicePresident #VenkaiahNaidu
    Next Story
    ×