search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காந்தி கண்ணன்
    X
    காந்தி கண்ணன்

    கடன் பணத்தை திருப்பி தராததால் சிறுமியை திருமணம் செய்த வாலிபர்

    திருச்சி அருகே கடனை திருப்பி தராததால் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் காந்தி கண்ணன் (வயது 33). இவருக்கும், 16 வயது சிறுமி ஒருவருக்கும் நேற்று முன்தினம் காலை திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவிலில் திருமணம் நடைபெறுவதாக மாவட்ட சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    உடனே சமூகநலத்துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதற்குள் திருமணம் முடிந்து மணமக்களை அழைத்துக்கொண்டு இருவீட்டாரும் அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பெண்ணின் பெற்றோரை போனில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, பெண்ணுக்கு 19 வயது முடிந்து விட்டதாகவும், அதற்கான ஆவணங்கள் உள்ளதாகவும் கூறினர்.

    இதனைத்தொடர்ந்து மணப்பெண் வயது குறித்து கோவிலில் கொடுத்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அவை போலியானது என தெரியவந்தது. உடனே நாமக்கல்லில் மணப்பெண் படித்த பள்ளிக்கு தகவல் தெரிவித்து, அவரது உண்மையான கல்விச்சான்றிதழ்களை பெற்று பார்த்தனர். அப்போது அவருக்கு 16 வயது தான் ஆகி உள்ளது என்பது தெரியவந்தது. இதுகுறித்து சமூகநலத்துறை அதிகாரிகள் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா விசாரணை நடத்தி, மணமகன் காந்திகண்ணன், துறையூரை சேர்ந்த சிறுமியின் குடும்பத்தினர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனிடையே போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில், மணப்பெண்ணான சிறுமியை உறவினர் ஒருவர் நேற்று காலை அழைத்து வந்து ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து அந்த சிறுமியை கோட்டை பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் போலீசார் தங்க வைத்தனர்.

    மேலும் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், காந்திகண்ணன் சென்னை வளசரவாக்கம் கிருஷ்ணாநகரில் வசித்து வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று அவர் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை திருமணம் செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது.

    காந்தி கண்ணன் திருமணம் செய்த சிறுமியின் குடும்பத்தினருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அந்த சிறுமியின் தந்தை திடீரென மரண மடைந்தார். சிறுமியின் தந்தை பலரிடம் கடன் வாங்கியிருந்ததால் மிகவும் பாதிக்கப்பட்டனர்.இதையடுத்து அந்த கடனை காந்தி கண்ணனே அடைத்தார்.

    பின்னர் தான் கொடுத்த பணத்தை அந்த சிறுமியின் தாயிடம் கேட்ட போது, சிறுமியின் தாயால் பணத்தை கொடுக்க முடியவில்லை. இதையடுத்து சிறுமியின் தாயிடம் பேசிய காந்திகண்ணன், உங்களால் கடனை அடைக்க முடியாது. இதுமட்டுமின்றி , உங்களது மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் போதும் கடன் வாங்க வேண்டியிருக்கும். எனவே உங்களது மகளை நானே திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு சிறுமியின் தாய் மறுத்துள்ளார். கடைசியில் சம்மதம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து வயதுக்காக போலி சான்றிதழ்கள் தயார் செய்து திருமணம் செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து காந்தி கண்ணனை போலீசார் கைது செய்து மேலும் விசாரிக்க உள்ளனர். #tamilnews
    Next Story
    ×