search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை உள்ளது- வைகோ
    X

    தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை உள்ளது- வைகோ

    தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகின்ற வகையில் அரசு செயல்படுவதாக வைகோ தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சேலம் சென்னை எட்டு வழிச்சாலை குறித்த பிரச்சனையில், நிலங்களை இழக்கின்ற வேதனையால் தவித்து அபயக்குரல் எழுப்பும் விவசாயிகளைச் சந்திக்கச் சென்ற காஞ்சி மக்கள் மன்றம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 19 பேரை, காவல்துறை கைது செய்து, அடித்துத் துன்புறுத்தியதோடு, அவர்கள் பயணித்த வேனையும் பறிமுதல் செய்துள்ளது.

    குறிப்பாக, காஞ்சி மக்கள் மன்றம், செஞ்சிலுவைச் சங்கம் போன்று மனித நேயத்துடன் தொண்டு செய்யும் அமைப்பு ஆகும். பார்வை இழந்தோர், வாய் பேச முடியாதோர், உடல் ஊன முற்றோர் ஆகியோரைப் பராமரித்துப் பாதுகாக்கும் சேவை அமைப்பு ஆகும். அதன் ஒருங்கிணைப்பாளர் சகோதரி மகேஷ், உடல் நலிவுற்ற நிலையிலும் அந்தத் தொண்டினைச் செய்து வருகின்றார். அந்த சகோதரியையும், அதே போன்ற சேவையில் ஈடுபட்டுள்ள ஜெஸ்ஸி என்ற சகோதரியையும் கைது செய்துள்ளனர்.

    தேசப் பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம் போன்ற சட்டங்களில், பொய் வழக்குப் போடும் நோக்கத்தில் காவல்துறை இருப்பதாக அறிகின்றேன்.

    ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கச் சென்ற வேல்முருகன் மீது, ஒரு பழைய வழக்கில் கைது செய்து, இரக்கம் இல்லாமல் துன்புறுத்திச் சிறையில் அடைத்தனர். எட்டு வழிப் பாதை குறித்து, சமூக வலைதளங்களில் கருத்துக்கூறிய ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வசீகரனை, சேலம் மாவட்ட காவல்துறையினர், சென்னை மதுரவாயல் வீட்டில் நள்ளிரவில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

    ‘இம்; என்றால் சிறைவாசம் என்ற சொற்றொடரை, அதிகார மமதையில் காவல் துறையின் மூலம் தமிழக அரசு அரங்கேற்றி வருகின்றது.

    அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகின்ற வகையில் செயல்படும் தமிழக அரசின் போக்குக்கு, பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், அடக்குமுறையின் மூலம் போராட்டங்களை நசுக்க நினைத்தால், அது ஒருபோதும் வெற்றி பெறாது; போராட்டம் மேலும் வீறுகொண்டு எழும் என அரசுக்கு எச்சரிக்கை செய்கின்றேன்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார். #MDMK #Vaiko
    Next Story
    ×