search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லுக்கான ஆதரவு விலையை உயர்த்தி வழங்க வேண்டும்- மத்திய அரசுக்கு வாசன் கோரிக்கை
    X

    நெல்லுக்கான ஆதரவு விலையை உயர்த்தி வழங்க வேண்டும்- மத்திய அரசுக்கு வாசன் கோரிக்கை

    நெல்லுக்கான ஆதரவு விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அமைச்சரவையில் ஒரு குவிண்டால் பொது ரக நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை ரூ. 200 ஆகவும், சன்ன ரகத்திற்கு ரூ. 160 ஆகவும் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு யானை பசிக்கு சோளப்பொரி போன்றது. அதாவது சாதாரண நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை ரூ.1,550 லிருந்து ரூ.1,750 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போல “ஏ” கிரேடு நெல்லுக்கு குவிண்டாலுக்கு ஆதரவு விலை ரூ.180 மட்டுமே உயர்த்தப்பட்டதால் அதன் விலை ரூ. 1,770 ஆக நிர்ணயிக்கப்படும். இந்த விலை உயர்வும் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு போதுமானதல்ல.

    ஏற்கனவே கோவை வேளாண் பல்கலைக்கழகம் 1 கிலோ நெல் உற்பத்திக்கு ரூ.32.50 செலவாகிறது என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி உற்பத்தி செலவை விட 50 சதவீதம் கூடுதல் ஆக விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ள நிலையில் நெல்லுக்கான ஆதரவு விலையை 1 கிலோவுக்கு ரூ.30 ஆக உயர்த்தி தரவேண்டும். வறட்சி, இயற்கை சீற்றம், பயிர்க்கடன் உரிய நேரத்தில் கிடைக்காதது, பொருளாதார வசதி இல்லாதது போன்ற பல்வேறு சிரமங்களுக்கு இடையில் நெல் பயிரிட்டும் நல்ல மகசூல் கிடைக்காமல் பெரும் நஷ்டம் அடைந்து வாழ்கிறார்கள் விவசாயிகள். விவசாயத்தொழில் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் பாதிப்படைந்து இருக்கின்ற வேளையில் அவர்கள் மீதான சுமையை குறைக்க வேண்டுமென்றால் விவசாயப் பயிர்களுக்கான ஆதரவு விலையை விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப கொடுத்து நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை.

    அது மட்டுமல்ல மத்திய பாரதிய ஜனதா அரசு பொறுப்பேற்ற பிறகு நெல்லுக்கான ஆதரவு விலையை 50 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரை அளவிற்கு மட்டுமே உயர்த்தியது. ஆனால் இந்த விலை உயர்வு போதுமானதல்ல.

    எனவே மத்திய அரசு விவசாயத்தை காப்பாற்ற வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும், விவசாயக் கூலித்தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தால் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து அதனை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TamilMaanilaCongress #GKVasan
    Next Story
    ×