search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிந்தாதிரிப்பேட்டை மேதின பூங்காவில் மெட்ரோ ரெயில் அவசர வழி
    X

    சிந்தாதிரிப்பேட்டை மேதின பூங்காவில் மெட்ரோ ரெயில் அவசர வழி

    மெட்ரோ சுரங்க ரெயில் பாதையில் திடீர் தீ விபத்தில் இருந்து பயணிகள் தப்பிக்க சிந்தாதிரிப்பேட்டை மேதின பூங்காவில் அவசர வழி அமைக்கப்பட்டு வருகிறது. #MetroTrain
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும் திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. பொது மக்கள், பயணிகள் இடையே வரவேற்பு ஏற்பட்டதையொட்டி மெட்ரோ ரெயில் திட்டம் சென்னை மாநகரம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

    சென்ட்ரல் - அண்ணாசாலை மெட்ரோ வழித்தட பாதையில் அரசினர் தோட்டம் ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

    இதையொட்டி சிந்தாதிரிப்பேட்டை மேதின பூங்காவில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்காக சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்ட்ரல் - சிந்தாதிரிப்பேட்டை 1.8 கிலோ மீட்டர் தூர மெட்ரோ ரெயில் பாதையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் பயணிகள் எளிதில் தப்பிக்க மேதின பூங்காவில் அவசர வழிப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

    சுரங்கத்தில் இருந்து பயணிகள் நேரடியாக தப்பிக்க 27 மீட்டர் உயரம் 6 மீட்டர் அகலத்தில் படிக்கட்டுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

    சுரங்க ரெயில் பாதையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் இங்குள்ள அவசர கதவுகளை பயணிகள் திறந்து கொண்டு எளிதில் வெளியேறி தப்பிக்கலாம். மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க சிறப்பு காற்றோட்ட வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

    சென்ட்ரல் - அண்ணா சாலை வழித்தட மெட்ரோ சுரங்கப்பாதையை மிகவும் கடினமாக போராடி ஊழியர்கள் அமைத்துள்ளனர். கூவம் ஆற்றின் அடியில் சேறு, சகதி, கடின பாறையின் கீழ் சுரங்க மெட்ரோ பாதை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். #MetroTrain
    Next Story
    ×