search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்மன் சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த 7 பவுன் நகை திருட்டு
    X

    அம்மன் சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த 7 பவுன் நகை திருட்டு

    நாகர்கோவில் வாத்தியார்விளையில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் அம்மன் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த 7 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி வாத்தியார்விளையில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இங்கு முத்தாரம்மனும், பத்திரகாளியம்மனும் ஒரே சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார்கள். இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 41 நாள் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 2 வாரத்தில் கோவில் கொடை விழா நடக்க இருக்கிறது. கோவிலில் தினமும் இரவு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதே போல நேற்று முன்தினம் இரவு பூஜைகளை முடித்துவிட்டு பூசாரி மற்றும் கோவில் நிர்வாகிகள் கோவிலை அடைத்துவிட்டு சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று காலை நிர்வாகி ஒருவர் கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலின் பொருட்கள் வைக்கும் பாதுகாப்பு அறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அறைக்குள் சென்று பார்த்தார். உள்ளே அனைத்து பொருட்களும் சிதறிக்கிடந்தன. மேலும் அம்மன் சன்னதி கதவின் சாவியும் கீழே கிடந்தது. உடனே சாவியை கையில் எடுத்தவாறு அம்மன் சன்னதி நோக்கி ஓடினார்.

    அங்கு சன்னதியில் முத்தாரம்மன் மற்றும் பத்திரகாளியம்மன் ஆகிய அம்மன் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க சங்கிலிகளை காணவில்லை. இரவில் கோவிலுக்குள் புகுந்த யாரோ மர்ம நபர், அம்மன் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. ஒவ்வொரு அம்மன் சிலையிலும் 3½ பவுன் நகை என மொத்தம் 7 பவுன் நகை திருட்டுப்போயிருக்கிறது.

    பின்னர் இதுபற்றி வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அனில்குமார், சுபாஷ் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே கோவிலில் நகை திருட்டு போன தகவல் அறிந்து ஊர் மக்கள் ஏராளமானோர் கோவிலில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

    அதன்பிறகு கோவிலுக்குள் சென்று போலீசார் பார்வையிட்டனர். அப்போது பாதுகாப்பு அறையில் ஒரு சட்டையும், ஒரு உளியும் கிடந்தது. மேலும் அருகேயுள்ள குப்பை கிடங்கில் பாதுகாப்பு அறை கதவின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. உடனே அவை அனைத்தையும் போலீசார் கைப்பற்றினர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர் உளியை கொண்டு பாதுகாப்பு அறையின் பூட்டை உடைத்து, அறைக்குள் இருந்த அம்மன் சன்னதி சாவியை எடுத்து சென்று, சன்னதியின் கதவை திறந்து நகையை திருடியதும், மீண்டும் பாதுகாப்பு அறைக்குள் சாவியை வீசிவிட்டு தப்பிச் சென்றதும் தெரிய வந்தது.

    மேலும் பாதுகாப்பு அறையில் கைப்பற்றப்பட்ட சட்டை மர்ம நபர் அணிந்ததாக இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதோடு மட்டும் அல்லாது அந்த அறையை மர்ம நபர் அசுத்தப்படுத்தி விட்டு சென்றிருக்கிறார்.

    போலீசார் திரட்டிய தடயங்கள் மற்றும் தகவல்களை வைத்து பார்க்கும்போது இந்த திருட்டில் உள்ளூர் திருடன் தான் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. எனவே மர்ம நபர் விரைவில் பிடிபட்டு விடுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    அதைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கோவிலில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். அதோடு மோப்ப நாயையும் போலீசார் அழைத்து வந்தனர். கோவிலில் பல்வேறு இடங்களில் மோப்பம் பிடித்த அந்த நாய் அங்கிருந்து வேகமாக ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதனையடுத்து கோவிலை சுற்றிலும் எங்கேனும் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டு இருக்கிறதா? என்று போலீசார் ஆய்வு செய்தனர். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

    இதே போல முத்தாரம்மன் கோவில் அருகேயுள்ள மற்றொரு கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து பணத்தை திருட யாரோ முயன்றுள்ளனர். ஆனால் உண்டியல் உடைக்க முடியாததால் அதில் இருந்த காணிக்கை பணம் தப்பியது. இந்த 2 சம்பவங்களிலும் ஒரே மர்ம நபர் தான் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் கூறுகிறார்கள்.

    இதுபோல் நேற்று முன்தினம் வடசேரி காசி விஸ்வநாதர் ஆலயத்திலும் மர்ம நபர் புகுந்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிச் சென்றுள்ளார்.

    நாகர்கோவிலில் அடுத்தடுத்து கோவில்களில் நடைபெறும் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். 
    Next Story
    ×