search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேசன் கடைகளில் அனைத்து பொருட்களும் வழங்க நடவடிக்கை - அமைச்சர் காமராஜ்
    X

    ரேசன் கடைகளில் அனைத்து பொருட்களும் வழங்க நடவடிக்கை - அமைச்சர் காமராஜ்

    அனைத்து பொருட்களும் ரேசன் கடைகளில் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார். #MinisterKamaraj #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் இன்று உணவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.

    அதில் ராஜேந்திரன் (தி.மு.க.) பேசும்போது கூட்டுறவு துறையில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். ரேசன் கடைகளில் அனைத்து பொருட்களும் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிராமப்புறங்களில் கூடுதல் மண்எண்ணெய் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.

    இதற்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அளித்த பதில் வருமாறு:-

    ‘‘தமிழ்நாட்டில் தான் மற்ற மாநிலங்களை விட உணவு பொருட்கள் சிறப்பாக வினியோகிக்கப்படுகின்றன. அனைவருக்கும் அனைத்து பொருட்களும் கிடைக்க வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக இருந்து வருகிறது. இதற்காகத் தான் மாதத்தின் முதல் 2 ஞாயிற்றுக்கிழமையையும் வேலை நாட்களாக அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

    தற்போது சிறப்பு வினியோக திட்டத்தின் கீழ் வழங்கும் துவரம் பருப்பு, பாமாயில் போன்றவற்றுக்கு மத்திய அரசு எந்த மானியமும் வழங்கவில்லை என்றாலும் அந்த திட்டத்தை நிறுத்தாமல் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தற்போது அனைத்து பொருட்களும் ரேசன் கடைகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறிய தவறு கூட நடக்கக்கூடாது என்பதற்காகவே அனைத்து ரேசன் கடைகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டுக்கு ஆரம்ப காலத்தில் 54 ஆயிரம் கிலோ லிட்டர் மண்எண்ணெயை மத்திய அரசு வழங்கியது. ஆனால் பின்னர் மத்தியில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சி இருந்த போது குறைக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டுக்கு 16,148 கிலோ லிட்டர் மண்எண்ணெயைதான் மத்திய அரசு வழங்குகிறது.



    அதை பகிர்ந்து அளித்து வருகிறோம். கூடுதலாக மண்எண்ணெய் வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்தி வருகிறது. பிரதமருக்கு தமிழக முதல்-அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். கூடுதல் மண்எண்ணெய் பெறுவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    கூட்டுறவு துறை தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்தார். அப்போது எந்த குறைபாடும் இன்றி கூட்டுறவு வங்கிகள் செயல்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. யார் தவறு செய்தாலும் அவர்கள் கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்த விவாதத்தின்போது தி.மு.க. உறுப்பினர்கள் துரைமுருகன், ரங்கநாதன் ஆகியோர் குறுக்கிட்டனர். அப்போது சபாநாயகர் மற்றும் அமைச்சருடன் வாக்குவாதம் நடைபெற்றது.  #MinisterKamaraj #TNAssembly
    Next Story
    ×