search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழை - பள்ளியின் சுவர் இடிந்தது
    X

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழை - பள்ளியின் சுவர் இடிந்தது

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் பள்ளியின் சுவர் இடிந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். #Rain

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதுபோல் நேற்றிரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 2மணி நேரம் வரை மழை பெய்தது. குறிப்பாக ஆலங்குடி பகுதியில் கன மழை பெய்தது. இதன் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன், யோகேஸ்வரன், சின்னத்தம்பி, வெள்ளையன், தில்லைக்கண்ணு ஆகியோரது வீடுகளின் சுற்றுச்சுவர்களில் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் புகுந்தது.

    மேலும் ஆலங்குடி அரசினர் பெண்கள் மேல் நிலைப் பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் குளம்போல தேங்கியது. பள்ளியின் சுற்றுச்சுவர்களும் உடைந்து சேதம் அடைந்தன.தெருக்களில் உள்ள சாலைகளில் மழைநீர் குளம்போல தேங்கி நிற்கின்றன. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

    இதே போல் பெரம்பலூரிலும் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். மழையினால் இரவு நேரத்தில் சுமார் 1 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    பெரம்பலூர் மாவட்டம் பெருமத்தூர், மங்களமேடு, அத்தியூர், அகரம் சீகூர், எறையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால் எறையூர்-பெருமத்தூர் சாலையோரம் உள்ள அரச மரத்தின் பெரிய கிளை முறிந்து சாலையின் நடுவே விழுந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்கள் உதவியுடன் சாலையில் கிடந்த மரக்கிளையை அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல் அப்பகுதியில் பலத்த மழையால் மரங்கள் சரிந்து விழுந்தன.

    கரூரில் பரவலாக பெய்த மழையின் காரணமாக கரூரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பஞ்சப்பட்டியில் 52.2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மேலும் கரூரில் 7 மிமீ., குளித்தலையில் 2மி.மீ., தோகைமலையில் 5 மி.மீ., கிருஷ்ணராயபுரத்தில் 3 மி.மீ., மாயனூரில் 5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

    திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் தற்போது பெய்துள்ள மழையால் மாவட்டத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான தூரலுடன் மழை பெய்தது. #Rain

    Next Story
    ×