search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் கிரண்பேடி மீது வழக்கு தொடருவேன் - நாராயணசாமி
    X

    கவர்னர் கிரண்பேடி மீது வழக்கு தொடருவேன் - நாராயணசாமி

    விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் கவர்னர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நானே வழக்கு தொடருவேன் என்று புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கவர்னர் பல மாவட்டங்களுக்கு ஆய்வு செய்ய சென்றபோது தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் போராட்டம் நடத்தி கைதும் செய்யப்பட்டார். இந்த நிலையில் தமிழக கவர்னர் தனது பணியை யாராவது தடுத்தால் 7 ஆண்டு சிறை தண்டனை என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இந்திய தண்டனை சட்டத்தின்படி கவர்னர் தனது அலுவலகத்தில் பணிபுரியும்போது குறுக்கீடு செய்யக்கூடாது. ஆனால், அவர் பல மாவட்டங்களுக்கு ஆய்வு செய்ய செல்லும்போது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த உரிமை உண்டு.

    கவர்னர், முதல்- அமைச்சர், அமைச்சர்கள் ஆய்வுக்கு செல்லும்போது விதிமுறைகளை மீறினாலும் அது தங்களுக்கு ஏற்புடையதில்லை என்ற போது போராட்டம் நடத்த உரிமை உண்டு.

    இந்த வி‌ஷயத்தில் தமிழக கவர்னர் விவரம் தெரியாமல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதை அப்படியே காப்பியடித்து புதுவை கவர்னரும் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பணியை தடுத்தால் சிறை தண்டனை என கூறியுள்ளார்.

    தமிழகம், புதுவை என எந்த மாநிலமாக இருந்தாலும், அரசின் அன்றாட நிகழ்வுகளில் கவர்னர்கள் தலையிட முடியாது. கவர்னர்களோ, துணை நிலை ஆளுநர்களோ மாவட்டங்களுக்கு செல்வதில் தவறில்லை.

    ஆனால், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் அனுமதி இல்லாமல் எந்த முடிவையும் அவர்கள் எடுக்க முடியாது. அவர்கள் செல்லும் பகுதிகளில் எதிர்ப்பு தெரிவித்து போராட அரசியல் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் உரிமை இருக்கிறது.

    மக்களால் தேர்வு செய்த அரசுக்குத்தான் மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றவும், செயல்படுத்தவும் உரிமை உண்டு. இதை நிறைவேற்றும்போது கவர்னர், துணை நிலை ஆளுநர் என முட்டுக்கட்டை போடக்கூடாது.

    சமீபத்தில் கவர்னர் கிரண்பேடி பாகூர் சென்றார். அப்போது பொதுமக்கள் 11 முறை பாகூர் வந்துள்ளீர்கள்? இதனால் என்ன பயன்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

    ஆனால், அவர்களுக்கு கவர்னர் எந்த பதிலும் கூறாமல் வந்துவிட்டார். பொதுமக்கள் யாரிடமும் கேள்வி எழுப்ப உரிமை உண்டு. சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ., அமைச்சர்கள் இல்லாமல் அரசு அலுவல்களை ஆய்வு செய்ய அதிகாரம் இல்லை.

    இதுதொடர்பாக பல முறை கவர்னருக்கு கடிதம் மூலமும், நேரிலும் தெரிவித்துள்ளேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். ஆனால் இதை புதுவை கவர்னர் தொடர்ந்து மீறி வருகிறார். அரசின் தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இது அரசியல் விதிகளுக்கு மீறானது.

    கவர்னராக பதவி வகிக்க கிரண்பேடிக்கு தகுதி இல்லை. அவர் தன்னார்வ தொண்டு நிறுவன தலைவராக இருக்கவே தகுதி உள்ளது. பிரதமர் மோடியிடம் கிரண்பேடியின் செயல்பாடு குறித்து 4 முறை புகார் தெரிவித்துள்ளேன்.

    மீண்டும் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். பிரதமர் நேரம் ஒதுக்கினால் 5-வது முறையாக கிரண்பேடி மீது புகார் செய்வேன்.

    கவர்னர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நானே வழக்கு தொடருவேன். ஏற்கனவே லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. கவர்னர் கிரண்பேடி மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அறிவிக்கப்படாத எமர்ஜென்சியைத்தான் மத்திய பாரதிய ஜனதா அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் இந்திரா காந்தி காலத்திலான எமர்ஜென்சியை விமர்சிக்க பாரதிய ஜனதாவுக்கு தகுதி இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×