search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்னை கைது செய்ய முயற்சி நடக்கிறது - சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு
    X

    என்னை கைது செய்ய முயற்சி நடக்கிறது - சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு

    தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை செயல்படுத்தி வருவதாகவும், என்னை கைது செய்ய முயற்சி நடப்பதாகவும் சீமான் குற்றம் சாட்டி உள்ளார்.
    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இணையதளம் ஒன்றில் அளித்த பேட்டி வருமாறு:-

    2010-ம் ஆண்டு மீனவர் படுகொலை தொடர்பாக நடந்த கூட்டத்தில் நான் கொஞ்சம் கூடுதல் நேரம் எடுத்துப் பேசிவிட்டேன் எனக் கூறி வழக்கு போட்டுள்ளார்கள். அந்தக் கூட்டத்தில் பேசியதற்காக ஆறு மாத தண்டனையை ஏற்கெனவே அனுபவித்துவிட்டேன்.

    8 ஆண்டுகளாக இவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. அதற்கும் ஒரு சம்மனை அனுப்பியுள்ளனர். வழக்குக்கு மேல் வழக்கு போட்டு நீதிமன்றங்களாக ஏறி இறங்க வைக்கத் திட்டமிட்டுள்ளனர். கவுதமனை கைது செய்ததன் மூலம் ஜனநாயகத்துக்கான குரல்கள் இருக்கவே கூடாது என நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட குரல் ஒலிக்கவே கூடாது என இந்த அரசாங்கம் நினைக்கிறது.

    என்னைக் கைது செய்வதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். நாளையிலிருந்து மதுரையில் இரண்டு வாரம் கட்டாயமாக கையெழுத்துப் போட வேண்டும் என உத்தரவு வந்துள்ளது. அதேநேரம் சேலம் ஓமலூரிலும் கையெழுத்துப் போட வேண்டும் என்றார்கள். இந்த இரண்டு கையெழுத்தையும் சென்னையிலிருந்தே போடுவதற்கு அனுமதி கேட்டிருக்கிறோம்.

    அதற்குள் ஏதாவது ஒரு வழக்கில் என்னைக் கைது செய்யத் திட்டமிட்டுள்ளனர். சட்டப்படி முன்ஜாமீன் கேட்கிறோம். அரசை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. மக்களுக்காகப் போராடும் குரல்களை ஒடுக்கினால், திட்டங்களை எளிதாக நிறைவேற்றலாம் என நினைக்கிறார்கள்.

    தி.மு.க, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அவர்களுக்கு எதிராகக் கடுமையாக வேலை பார்த்தோம். அப்போது அடக்குமுறைகள் இருந்ததே தவிர, இந்த அளவுக்கு இல்லை. அன்று கூட்டத்துக்கு அனுமதி கொடுக்க மாட்டார்கள். நெருக்கடிகள் கொடுப்பார்கள். ஆனால், இந்த ஆட்சியைப் போல் அவர்கள் நடந்து கொண்டது இல்லை.

    ஜெயலலிதாவுக்கு எதிராக எவ்வளவோ போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். இந்தளவுக்கு அவர் எங்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்ததில்லை. இப்போது அறிவிக்கப்படாத அவசர நிலையை இந்த அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

    ஜெயலலிதா இறந்த பிறகு, இந்த ஆட்சியை மத்திய அரசு அப்படியே எடுத்துக் கொண்டது. ஒரு சீட்டைக்கூடப் பெறாமல், தமிழ்நாட்டை மத்திய அரசு ஆள்கிறது என்பதுதான் உண்மை.

    கருணாநிதி, ஜெயலலிதா இருந்தபோது இந்த ஆளுநர்கள் ஏன் ஆய்வுகளை நடத்தவில்லை? மத்திய அரசின் திட்டங்களை குடியரசுத் தலைவர் ஆய்வு செய்தால், மோடி ஏற்றுக் கொள்வாரா?.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார், ‘இங்கு 2 கோடியே 80 லட்சம் கார்கள் வந்துவிட்டன’ என்கிறார். கார் போவதைப் பற்றித்தான் அவர் கவலைப்படுகிறார். நீரும் சோறும் பற்றி யாரும் கவலைப்படவில்லை.

    கார் இல்லை என்ற ஏக்கத்தில் எந்த நாட்டில் புரட்சி வந்துள்ளது? ஆனால், நீரும் சோறும் இல்லாத நாட்டில் புரட்சி வராமல் இருந்திருக்கிறதா? இதைக் கேட்டதற்காகத்தானே துப்பாக்கித் தோட்டாவைப் பரிசாகக் கொடுத்தார்கள்.

    சோமாலியாவில் நடந்தது, நாளை தமிழகத்திலும் நடக்கும்.

    பச்சைப் பசேல் என இருக்கும் விவசாய நிலங்களை அழித்து, நீராதாரங்களை அழித்து, அரணாக இருக்கும் மலைகளை அழித்துப் போடப்படும் சாலைக்கு எப்படிப் பசுமைச் சாலை எனப் பெயர் வைக்கிறார்கள்? அதற்கு கருஞ்சாலை எனப் பெயர் வைக்க வேண்டும். தங்க நாற்கரச் சாலையால் எத்தனை மரங்கள் அழிக்கப்பட்டன.. இவர்கள் நட்டு வளர்க்கும் மரங்களில் பறவைகள் கூடு கட்டுமா?”

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×