search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள்- நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
    X

    கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள்- நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

    நடப்பு கல்வி ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
    சென்னை:

    நடப்பு கல்வி ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. நாளை(புதன்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம்.

    இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உயர்கல்வி வளர்ச்சியில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ வேண்டும் எனும் இலக்கினை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு திட்டங்கள் உயர்கல்வி நிறுவனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு செயலாக்கம் பெற்று வருகின்றன. அரசு கல்லூரிகளில் மாணாக்கர்களின் சேர்க்கை விகிதம் உயர்ந்து கொண்டு வருவதை கருத்தில் கொண்டு 2011-12 ஆம் கல்வியாண்டு முதல் 2017-18 ஆம் கல்வியாண்டு வரை 1232 புதிய பாடப்பிரிவுகள் முன்னாள் முதல்-அமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்டன.

    பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவு மாணவ-மாணவிகள் உயர்கல்வி பெறவேண்டும் என்ற நோக்கிலும், பல்வேறு புதிய பாடப்பிரிவுகள் தோற்றுவிப்பதால் மாணவ-மாணவிகள் அதிகளவில் பாடப்பிரிவுகளை தேர்ந்து எடுப்பதற்கு ஏற்றவாறும் இதனால் வேலைவாய்ப்புகள் அதிகம் பெற ஏதுவாக முதல்-அமைச்சர் கடந்த ஜூன் 1-ந்தேதி அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-இன் கீழ் 2018-19ஆம் கல்வியாண்டில் 264 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் இப்பாடப்பிரிவுகளை கையாளுவதற்கு 683 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் இதற்கென அரசுக்கு தொடரும் செலவினமாக 68 கோடியே 46 லட்சம் ரூபாய் ஏற்படும் என்றும் இப்பாடப் பிரிவுகளின் தேவைக்கென 324 வகுப்பறை கட்டடங்கள், 50 ஆய்வகங்கள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகள் 62 கோடியே 75 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள்.

    மேற்காணும் அறிவிப்பின்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2018-19-ம் கல்வியாண்டிலிருந்து 61 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 75 இளங்கலை, 53 முதுகலை, 65 எம்.பில் மற்றும் 71 பிஎச்.டி. ஆக மொத்தம் 264 புதிய பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கும், இப்பாடப்பிரிவுகளை கையாளுவதற்கான 693 உதவிப்பேராசிரியர் பணியிடங்களில் முதலாமாண்டிற்கு 270 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு நிர்வாக ஒப்புதல் மற்றும் அதற்கென ரூ.26 கோடியே 39 லட்சத்து 73 ஆயிரத்து 840 நிதி ஒப்பளிப்பு வழங்கியும், தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    மேற்காணும் பாடப்பிரிவுகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் (27-ந்தேதி) அரசாணையில் குறிப்பிடப்பட்ட கல்லூரிகளில் வழங்கப்படும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அந்தந்த கல்லூரிகளில் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூலை) 9-ந்தேதி. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 264 பாடப்பிரிவு மற்றும் கல்லூரிகள் அடங்கிய அரசாணையினை தமிழக அரசின் இணையதளத்தில் ( www.tn.gov.in ) உயர்கல்வித் துறையின் கீழ் காணலாம். மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பினை இக்கல்வியாண்டிலிருந்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×