search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பசுமை விரைவு சாலைத் திட்டத்தை மாற்று வழியில் நிறைவேற்ற நிபுணர் குழு அமைத்திட வேண்டும்- ஸ்டாலின்
    X

    பசுமை விரைவு சாலைத் திட்டத்தை மாற்று வழியில் நிறைவேற்ற நிபுணர் குழு அமைத்திட வேண்டும்- ஸ்டாலின்

    சென்னை - சேலம் பசுமை விரைவு சாலைத் திட்டத்தை மாற்று வழியில் நிறைவேற்ற நிபுணர் குழு அமைத்திட வேண்டும் என்று தமிழக அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #ChennaiSalemHighway
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    “சென்னை - சேலம் 8 வழி பசுமை விரைவுச்சாலை” அமைக்கும் திட்டத்தை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயிகள், பாரம்பரியமாகத் தங்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையான விளை நிலங்கள் பறிபோகின்றனவே என்று மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

    இந்த திட்டத்தை, “எப்படியும் நிறைவேற்றியே தீருவேன்” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதிக்க எண்ணத்துடன் அதீத ஆர்வமும் அளவில்லா வேகமும் காட்டுவதன் பின்னணி என்ன?.

    நீர் ஆதாரமே தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கின்ற நிலையில், இந்தத் திட்டத்தால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிணறுகள், நூறுக்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள், குட்டைகள் அழித்து நாசமாக்கப்படும் என்று வெளிவரும் செய்திகளை, கடமை உணர்வும் பொறுப்பும் உள்ள, மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஓர் அரசு புறந்தள்ளிவிட்டு, இத்திட்டத்தை நீர் ஆதாரங்களை அழித்து மண்மேடாக்கி நிறைவேற்றத் துடியாய்த் துடிப்பது ஏன்?.

    தி.மு.க. சார்பில் மக்களிடம் கருத்துக்கேட்பு நடத்துங்கள் என்று சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்த பிறகு, ஆங்காங்கே நீர்த்துப்போன வெற்றுக் கருத்துக்கேட்பு என்ற கண்துடைப்பு நாடகம் மட்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் ஏனோதானோவென நடத்திவிட்டு, விவசாய நிலங்களுக்குள் கல் ஊன்றுவதைத் தொடருவது ஏன்?.

    திட்டத்திற்கு எதிராக நியாயமான கருத்துகளைச் சொல்லும் மக்களை கைது செய்வதையும் மிரட்டுவதையும் நிறுத்தாதது ஏன்?. அ.தி.மு.க. அரசின் இந்த அப்பட்டமான அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. 5 மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் மிக முக்கியம் என்பதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இனியாவது உணர முன்வரவேண்டும்.

    சொந்த மாவட்ட மக்களின் போராட்டத்தைப் பார்த்தாவது, அவர் இந்தத் திட்டத்தை எதிர்க்கும் மக்களின் வீரியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே விவசாய நிலங்களோ, நீர் ஆதாரங்களோ, பசுமை நிறைந்த மலைகளோ பாதிக்கப்படாத வகையில், இந்த சென்னை - சேலம் பசுமை விரைவு சாலைத் திட்டத்தை மாற்று வழியில் நிறைவேற்றுவதற்கு ஏற்றதொரு திட்டத்தைத் தயாரிப்பதற்கு அல்லது இப்போது பயன்பாட்டில் உள்ள சாலைகளில் ஒன்றை அகலப்படுத்துவதற்கான திட்டத்தைத் தயாரிப்பதற்கு, உடனடியாக ஒரு நிபுணர் குழுவை அமைத்திட வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #ChennaiSalemHighway
    Next Story
    ×