search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிணத்துக்கடவில் பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல்
    X

    கிணத்துக்கடவில் பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல்

    கைதான முக்கிய குற்றவாளி கொடுத்த தகவலின்பேரில் கிணத்துக்கடவில் பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    கோவை:

    கோவை வேலாண்டிபாளையம் மருதகோனார் வீதியில் உள்ள ஒரு கடையில் தனி அறை அமைத்து 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்த அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 31), வடவள்ளி மகாலட்சுமி நகரை சேர்ந்த கிதர்முகமது (62) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அந்த அறையில் இருந்து ரூ.1 கோடியே 18 லட்சம் கள்ள நோட்டுகள் மற்றும் அதை அச்சடிக்க பயன்படுத்திய எந்திரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான காரமடையை சேர்ந்த சுந்தர் (38) என்பவர் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் ஆனந்த், கிதர்முகமது, சுந்தர் ஆகியோரை காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.

    இதில் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த உதய்பிரகாஷ் (34), விஜயகுமார் (35) ஆகியோர்தான் கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் எந்திரங்களை வாங்கி கொடுத்ததாக தெரி வித்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் திருப்பூர் சென்று உதய்பிரகாஷ், விஜயகுமார் ஆகியோரை கைது செய்து கோவை அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    மேலும் சுந்தரிடம் போலீசார் தனியாக விசாரணை செய்தபோது, கிணத்துக்கடவில் உள்ள தனது நண்பரின் வீட்டில் கள்ள நோட்டுகளை அச்சடிக்க காகிதங்கள் மற்றும் கள்ள நோட்டுகளை பதுக்கி வைத்து இருப்பதாக தெரிவித்தார். உடனே போலீசார் கிணத்துக்கடவு சென்று, அந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் வெள்ளை காகிதங்கள் இருந்தன. அத்துடன் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் 5 இருந்தன.

    உடனே தனிப்படை போலீசார் அந்த 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் கள்ள நோட்டுகளை அச்சடிக்க வைத்திருந்த வெள்ளை காகிதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கோவை கொண்டு வந்தனர். கிணத்துக்கடவை சேர்ந்த சுந்தரின் நண்பர் வீட்டில் யாரும் இல்லை. எனவே அவருக்கு இந்த வழக்கில் தொடர்பு உள்ளதா? தற்போது அவர் எங்கு உள்ளார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘சுந்தர், ஆனந்த், கிதர்முகமது ஆகியோர் கால்நடைகள் சந்தைக்கு சென்றுதான் கள்ள நோட்டுகளை வினியோகம் செய்து உள்ளனர். எனவே அவர்களிடம் இருந்து கள்ள நோட்டுகளை பெற்றவர்கள் தாராளமாக போலீசில் புகார் செய்யலாம். அவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும்’ என்றனர். 
    Next Story
    ×