search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலைப்பகுதியில் மழை நீடிப்பு - அணைகளில் தொடர்ந்து நீர்மட்டம் உயர்வு
    X

    மலைப்பகுதியில் மழை நீடிப்பு - அணைகளில் தொடர்ந்து நீர்மட்டம் உயர்வு

    தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில் நெல்லை மாவட்ட மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைகளின் தொடர்ந்து நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
    நெல்லை:

    தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து நெல்லை மாவட்ட மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே பெய்த மழையினால் கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு ஆகிய 3 அணைகள் நிரம்பியுள்ளன.

    மற்ற அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் வேகமாக நிரம்பி வருகின்றன. பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 80.35 அடியாக இருந்தது. இன்று இந்த அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 82.20 அடியாக அதிகரித்துள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 1510 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று 97.44 அடியாக இருந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 97.31 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 84.92 அடியாக இருந்தது. இன்று இது 85 அடியாகி உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 114 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 75 அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    85 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கடனா அணை வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 65.70 அடியாக இருந்த இந்த அணை நீர்மட்டம் இன்று 66 அடியாகி உள்ளது.

    84 அடி உச்சநீர்மட்டம் கொண்ட ராமநதி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. நேற்று இந்த அணை நீர்மட்டம் 77.50 அடியாக இருந்தது. இன்று இது 78.25 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணை நிரம்ப இன்னும் 5 அடி தண்ணீரே தேவை.

    நம்பியாறு அணை நீர்மட்டம் 11.78 அடியாக உள்ளது. 132.22 அடி உச்சநீர்மட்டம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று 117.50 அடியாக இருந்தது. இன்று இது 119.50 அடியாக அதிகரித்து உள்ளது. மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று காலைவரை அணைப்பகுதியில் அதிகபட்சமாக குண்டாறு அணைப்பகுதியில் 33 மில்லிமீட்டர் மழை பெய்தது. அடவிநயினார் அணையில் 18 மில்லிமீட்டர் மழையும், பாபநாசத்தில் 6 மில்லி மீட்டர் மழையும், கடனா அணையில் 2 மில்லிமீட்டர் மழையும், சேர்வலாறில் ஒரு மில்லிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
    Next Story
    ×