search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராசிபுரம் அருகே பள்ளி மாணவர்களை கடத்த முயற்சி?- பொதுமக்கள் மறியல்
    X

    ராசிபுரம் அருகே பள்ளி மாணவர்களை கடத்த முயற்சி?- பொதுமக்கள் மறியல்

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பள்ளி மாணவர்களை கடத்த முயன்ற மர்மநபர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் பேரூராட்சிக்கு உட்பட்டது குச்சிக்காடு. இங்கு நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெருமாள் மகன் மகுலீஸ்வரன் (வயது 12), ராஜகோபால் மகன்கள் கிரிமுருகன் (12), ராஜமுருகன் (6), முருகேசன் மகன் யுவன்பாரதி (12), சுந்தரேசன் மகன் தருண் (12).

    இவர்கள் அனைவரும் ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் முனியப்பம் பாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களில் மகுலீஸ்வரன் 8-ம் வகுப்பும், கிரிமுருகன், யுவன்பாரதி, தருண் ஆகியோர் 7-ம் வகுப்பும், ராஜமுருகன் 1-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    வழக்கம்போல் இன்று காலை 8.30 மணியளவில் மாணவர்கள் 5 பேரும் வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் வடுகம்-காக்காவேரி சாலையில் உள்ள குச்சிக்காடு இரட்டை கம்பம் அருகில் சென்றபோது அந்த வழியாக ஆம்னி வேன் ஒன்று வந்ததாகவும், அதில் இருந்து இறங்கிய ஒருவர் மாணவர்களிடம் மிட்டாய் சாப்பிடுங்கள் என்று கூறியதாகவும், அப்போது மாணவர்கள் அதை வாங்க மறுத்ததாகவும், அந்த சமயத்தில் அந்த நபர் மிட்டாய் வாங்கிக்கொள்ளாவிட்டால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டியாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

    பயந்துபோன மாணவர்கள் இது பற்றி அவர்களது வீட்டுக்குச் சென்று பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இது பற்றி கேள்விப்பட்டதும், ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வேனில் வந்தவர்கள் மாணவர்களை கடத்த வந்தவர்களாக இருக்கலாம் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி ராசிபுரம்-புதுப்பட்டி ரோட்டில் குச்சிக்காடு பிரிவு பாதை அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளிக்கு செல்ல போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஏற்கனவே குச்சிக்காடு கிராமத்திற்கு வந்து சென்ற அரசு போக்குவரத்துக் கழக டவுன் பஸ் கடந்த ஒரு வருடமாக வருவதில்லை. மாணவர்களின் நலன் கருதி மீண்டும் குச்சிக்காடு கிராமத்திற்கு அரசு போக்குவரத்துக் கழக டவுன் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

    இது பற்றி கேள்விப்பட்டதும் ராசிபுரம் போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், நாமகிரி பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். குச்சிக்காடு கிராமத்திற்கு பஸ் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதால் குழந்தைகளை கடத்திவிடுவார்கள் என்ற பயம் தேவையில்லை என்றும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் எடுத்துச் சொன்னார்கள். அதன்பிறகு அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

    இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட பட்டணம் முனியப்பம்பாளையத்தைச் சேர்ந்த பொது மக்கள் பட்டணம் முனியப்பம்பாளையம் பிரிவு ரோடு அருகில் குழந்தைகளை கடத்தல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்குபின் போராட்டம் கைவிடப்பட்டது.

    2 இடங்களில் நடந்த இந்த சாலை மறியல் காரணமாக ராசிபுரம்-புதுப்பட்டி சாலையில் 1 அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Tamilnews
    Next Story
    ×