search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு - எஸ்.வி.சேகர் கோர்ட்டில் ஆஜர்
    X

    பெண் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு - எஸ்.வி.சேகர் கோர்ட்டில் ஆஜர்

    பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகர் எழும்பூர் கோர்ட்டில் இன்று ஆஜரானார். #SVeShekar
    சென்னை:

    பா.ஜனதா கட்சி பிரமுகரும், காமெடி நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக வெளியிட்டிருந்த கருத்து கடும் எதிர்ப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் எஸ்.வி.சேகர் இந்த வழக்கில் முன்ஜாமீன் பெறுவதற்காக கோர்ட்டை நாடினார்.

    ஆனால் கோர்ட்டு முன் ஜாமீன் அளிக்கவில்லை. சாதாரண நபர்கள் மீது இதுபோன்ற வழக்குகளில் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ? அதே நடவடிக்கையை எஸ்.வி.சேகர் மீது எடுக்கலாம் என்று கோர்ட்டு பரிந்துரைத்தது. இருப்பினும் எஸ்.வி.சேகரை போலீசார் கைது செய்யவில்லை.

    இதற்கிடையே எஸ்.வி. சேகர் மீது சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் உள்ள அல்லிகுளம் எழும்பூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டால் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டியதில்லை என்று சட்டம் சொல்கிறது.

    இதன் காரணமாகவே மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் அவர் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து எஸ்.வி.சேகர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதன்படி எஸ்.வி.சேகர் இன்று காலை 10 மணி அளவில் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் ஆனார். இதற்காக சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் உள்ள அல்லி குளம் கோர்ட்டு வளாகம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.



    கோர்ட்டு வளாகத்தில் 3 வாயில்களிலும் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். துணை கமி‌ஷனர் சரவணன் தலைமையில் கோர்ட்டு வளாகம் முழுவதிலும் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    எஸ்.வி.சேகர், கோர்ட்டில் ஆஜராவதை படம் பிடிப்பதற்காக ஏராளமான பத்திரிகையாளர்கள் திரண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் கோர்ட்டு வளாகத்தினுள் அனுமதிக்கப்படாமல் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

    எஸ்.வி.சேகர் காரில் கோர்ட்டு வளாகத்தில் நுழைந்ததும், பத்திரிகையாளர்களும் படம் எடுப்பதற்காக முண்டியடித்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் லேசான மோதல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பத்திரிகையாளர்கள் போலீஸ் எதிர்ப்பை தாண்டி முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

    எஸ்.வி.சேகருடன் காரில் போலீஸ்காரர் ஒருவரும் பாதுகாப்புக்காக உடன் வந்தார். காரில் இருந்து இறங்கியதும் எஸ்.வி.சேகரை சூழ்ந்து கொண்ட போலீசார் அவரை சுற்றி அரண் போல நின்றனர். பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்குள் எஸ்.வி.சேகர் ஆஜராவதற்காக அழைத்துச் செல்லப்பட்டார். எஸ்.வி. சேகருக்கு வரலாறு காணாத வகையில் போலீசார் பாதுகாப்பு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #SVeShekar

    Next Story
    ×