search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் இறைச்சி கடை ஊழியர் கொலையில் வாலிபர் கைது
    X

    திண்டுக்கல் இறைச்சி கடை ஊழியர் கொலையில் வாலிபர் கைது

    திண்டுக்கல் இறைச்சி கடை ஊழியர் கொலை வழக்கில் வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் குமரேசன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்த குமரேசன் நேற்று போலீஸ் நிலையம் அருகிலேயே 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்ட பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    முதல் கட்ட விசாரணையில் பழிக்கு பழியாக கொலை நடந்தது தெரியவந்தது. இதனால் மேலும் ஒரு கொலை நடந்து விடாமல் இருப்பதற்காக நேற்று இரவு முழுவதும் போலீசார் நகர் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக பாறைப்பட்டி, மேட்டுப்பட்டி, செல்லாண்டியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

    கொலை செய்யப்பட்ட குமரேசன் மீது 2016-ம் ஆண்டு நடந்த கென்னடி கொலை, 2015-ல் நடந்த விக்னேஷ் கொலை வழக்கு உள்பட அடி-தடி, பணம் பறித்தல் போன்ற 7 வழக்குகள் உள்ளன.

    கடந்த மாதம் நடந்த கோவில் திருவிழாவின் போது, திருப்பூர் பாண்டி தரப்பினருக்கும், கோபிநாத் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் திருப்பூர் பாண்டியின் மகன்களை கோபிநாத் தரப்பினர் தாக்கியுள்ளனர். கோபிநாத் தரப்புக்கு ஆதரவாக குமரேசன் இருந்து வந்தார்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு செல்லாண்டி அம்மன் கோவில் தெருவில் வந்த குமரேசனின் நண்பர் முத்துவேலை ஆசிக் கத்தியால் குத்தினார். இதனால் ஆத்திரமடைந்த குமரேசன் ஆசிக்கிடம் தகராறு செய்து இனிமேல் இது போன்ற செயலில் ஈடுபட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

    மேலும் கடந்த சில நாட்களாக அடிக்கடி குமரேசன் செல்லாண்டி அம்மன் கோவில் தெருவுக்கு வந்து சென்றுள்ளார். இதனால் ஆசிக் தனது நண்பர்களை கொலை செய்ய நோட்டமிடத்தான் குமரேசன் வருவதாக சந்தேகமடைந்தார்.

    இதனால் தான் முந்திக் கொள்ள வேண்டும் என நினைத்து 6 பேர் இந்த கொலையை செய்துள்ளனர். தற்போது பிடிபட்டுள்ள வாலிபர் கொடுத்துள்ள தகவலின் பேரில் மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×