search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாடு முழுவதும் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது - நாராயணசாமி
    X

    நாடு முழுவதும் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது - நாராயணசாமி

    நாடு முழுவதும் பாரதிய ஜனதாவுக்கு எதிர்ப்பான அலை வீசி வருவதாக முதல்வர் நாராயணாசமி கூறியுள்ளார். #HappyBirthdayRahulGandhi #BJP #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த ராகுல்காந்தி பிறந்தநாள் விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கேட்டுக் கொண்டதற்கிணங்க அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு 19 ஆண்டுகள் கட்சியை வழிநடத்திய சோனியாகாந்தி பொறுப்பளித்துள்ளார். ராகுல்காந்தி தலைவராக வர கட்சி தலைமையில் 10 பேர் கையெழுத்திட்டோம். அதில் புதுவை மாநிலத்திற்கு முக்கியத்துவமும், மதிப்பும் அளித்து எங்களையும் கையெழுத்திட செய்தார்.

    இதன்மூலம் கட்சித் தலைமைக்கு புதுவை மீது எவ்வளவு பாசம் உள்ளது என்பது தெரியும். நாடு முழுவதும் பா.ஜனதாவுக்கு எதிர்ப்பான அலை வீசுகிறது. பணமதிப்பிழப்பு, மாட்டிறைச்சி தடை, பாதுகாப்பின்மை, சர்வாதிகாரம், இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரிப்பது ஆகிய காரணங்களால் மக்கள் பா.ஜனதாவை வெறுத்துள்ளனர். இதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி பிரதமராவது உறுதியாகியுள்ளது.


    இந்திராகாந்தி மறைந்த போது ராஜீவ்காந்தி 44 வயதில் நாட்டின் பிரதமராக பதவியில் அமர்ந்தார். அதேபோல ராகுல்காந்தி தனது 48-வது வயதில் பிரதமராக அமரவுள்ளார். வருகிற அக்டோபர் மாதம் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, அரியானா, ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும்.

    இதேபோல தென்மாநிலங்களான கர்நாடகாவில் குமாரசாமி கட்சியின் ஆதரவோடு 28 இடங்களில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம். தமிழகம், புதுவை, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா என தென்மாநிலங்களில் பா.ஜனதாவே இல்லை. மேற்கு மாநிலங்களிலும் பா.ஜனதா கிடையாது. பீகாரில் லாலுபிரசாத் யாதவுடன் இணைந்தும், உத்திர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ், மாயாவதியுடன் இணைந்து வெற்றியை பெறுவோம்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜனதாவை தேடும் நிலை ஏற்படும். பா.ஜனதாவின் தவறான கொள்கையால் நாடு முழுவதும் மக்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மக்களின் அதிருப்தியை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால்தான் மதச்சார்பற்ற தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பா.ஜனதாவை விரட்டியடிக்க ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார். தற்போது வளர்ச்சியைவிட ஜனநாயகம், ஒற்றுமை ஆகியவைதான் நாட்டிற்கு தேவைப்படுகிறது.


    பா.ஜனதா ஆட்சியில் 4 ஆண்டுகளில் 2 ஆண்டுகள் பிரதமர் வெளிநாட்டில்தான் இருந்துள்ளார். அவர் 24 மணி நேரமும் தேர்தலைப் பற்றிதான் சிந்திக்கிறார்.

    மக்களைப் பற்றிய சிந்தனை இல்லை. பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதுவை அரசின் முட்டுக்கட்டைகள் காணாமல் போய்விடும். கட்சியினர் பதவி வேண்டுமென்று எண்ண வேண்டாம். தேவையான நேரத்தில் பதவி கொடுப்போம். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு ராகுல்காந்தி பிரதமராக புதுவையிலிருந்து ஒருவர் வெற்றி பெற வேண்டும். அதற்காக நாம் பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #HappyBirthdayRahulGandhi #BJP #Narayanasamy
    Next Story
    ×