search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகத்தில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 23ஆயிரம் கனஅடியாக சரிந்தது
    X

    கர்நாடகத்தில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 23ஆயிரம் கனஅடியாக சரிந்தது

    கர்நாடகத்தில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக சரியத் தொடங்கி உள்ளது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் பெய்த பலத்தமழை காரணமாக கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. 84.80 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.

    இதையடுத்து அந்த அணையிலிருந்து பாதுகாப்பு கருதி, 35ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலு மற்றும் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது.

    நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 847 கனஅடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 32ஆயிரத்து 421 கனஅடி தண்ணீர் வந்தது.

    நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று முன்தினம் 40அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 45.05 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 5.05 அடியாக உயர்ந்தது.

    இன்று மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 24ஆயிரத்து 99 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்திறப்பை விட தண்ணீர்வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் 48.47 அடியாக உயர்ந்து உள்ளது.

    இந்த நிலையில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதியில், மழை குறைந்ததால் கபினி அணைக்கு வரும் நீர்வரத்து நேற்று வினாடிக்கு 9ஆயிரத்து 500 கனஅடியாக சரிந்தது. இதையடுத்து கபினி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 729 அடியாக குறைக்கப்பட்டது.

    கிருஷ்ணராஜசாகர் அணைக்கு இன்று 7ஆயிரத்து 753 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் 102.62 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியாகும். அணையில் இருந்து 376 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    கபினி அணையில் இருந்து அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடந்த 2 நாட்களாக காவிரியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர், நேற்று முதல் குறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 32ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    இந்த நிலையில் நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 23ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இன்று காலை இது 9ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    இதனால் கடந்த 2 நாட்களாக வெள்ளப் பெருக்கு காரணமாக ஒகேனக்கல் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டு இருந்த தடை இன்று நீக்கப்பட்டது. இன்று காலை முதல் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பரிசல் சவாரிக்கு 3-வது நாளாக தடை நீடிக்கிறது.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தினை பிலிகுண்டு லுவில் நீர் பாசனத்துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால், இன்று பிற்பகல் முதல் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து வெகுவாக குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் 2 நாட்களாக வேகமாக உயர்ந்த நீர்மட்டம், நாளை முதல் மெல்ல, மெல்ல உயரும்.

    கர்நாடக மாநிலம் மற்றும் கேரள வயநாடு பகுதியில் இன்னும் ஒருவாரம் மழை நீடித்திருந்தால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழுமையாக நிரம்பி, காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறப்பதற்கான சூழ்நிலை உருவாகி இருந்திருக்கும்.

    மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து, காவிரி டெல்டா குறுவை சாகுபடிக்கு, இந்த மாத இறுதியில் தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும். ஆனால் கர்நாடகத்தில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் சரியத் தொடங்கி உள்ளது.

    இதனால் பலத்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த காவிரி டெல்டா விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×