search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிற்சாலையில் இரும்பு கம்பி தாக்கியதில் கல்லூரி மாணவர் பலி
    X

    தொழிற்சாலையில் இரும்பு கம்பி தாக்கியதில் கல்லூரி மாணவர் பலி

    காவேரிப்பட்டணம் அருகே மாங்கூழ் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவரின் தலையில் இரும்பு கம்பி தாக்கியதில் பரிதாபமாக இறந்தார்.
    காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணம் அருகே மாங்கூழ் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவரின் தலையில் இரும்பு கம்பி தாக்கியதில் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பென்னேஸ்வரமடத்தைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் சத்யராஜ் (வயது 23). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி. வேதியியல் பாடப்பிரிவு 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் விடுமுறை நாட்களில் காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஒரு தனியார் மாங்கூழ் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வந்தார்.

    இந்தநிலையில் கல்லூரி விடுமுறை என்பதால் மாணவர் நேற்று முன்தினம் அந்த தொழிற்சாலையில் மாம்பழங்களை பெட்டியில் அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தொழிற்சாலையில் இருந்த கயிறு ஒன்று அறுந்து விழுந்தது. இதில் கம்பி ஒன்று சத்யராஜின் தலையில் தாக்கி பலத்த காயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இறந்து போன மாணவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சத்யராஜின் குடும்பத்தினர், உறவினர்கள் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையம் முன்பு கோஷம் எழுப்பினார்கள். மேலும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து சத்யராஜின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 
    Next Story
    ×