search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்
    X

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

    ஒரு போக சாகுபடிக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்த பிறகே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
    திருக்காட்டுப்பள்ளி:

    கர்நாடக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவைக்காக அவசர கதியில் மேட்டூர் அணையை திறக்கக்கூடாது. ஒரு போக சாகுபடிக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்த பிறகே திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று சொல்லப்படும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் கடந்த 7 ஆண்டுகளாக பெரும் சோதனைகளை சந்தித்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் தாமதமாக திறக்கப்படுவது, அப்படி திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்று சேருவதில் தடங்கல் ஏற்படுவது, நடவு செய்த பின்னர் போதுமான தண்ணீர் கிடைக்காமல் இருப்பது என காவிரி பாசன பகுதி விவசாயிகள் பல்வேறு நிலைகளில் சோதனைகளை தாங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.

    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதால் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை திறந்துவிடும். இந்த ஆண்டு தடையின்றி விவசாயம் செய்யலாம் என்று விவசாயிகள் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தங்கள் பிரதிநிதிகளை அறிவித்த நிலையில் கர்நாடக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இதனால் ஆணையம் அமைக்கப்பட்டும் சிக்கல் தான் நீடிக்கிறது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீ்ர்வரத்து அதிகரித்து வருகிறது. கபினி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. கர்நாடக அணையில் இருந்து அதிகஅளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து அணை நிரம்பினால் தடையின்றி நெல் சாகுபடி செய்ய இயலும் என காவிரி பாசன விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் தண்ணீர் வருகிறதே என்ற காரணத்தை வைத்து கொண்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    தஞ்சையை அடுத்த கரையாம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி கலியமூர்த்தி: மேட்டூர் அணையில் தண்ணீ்ர் முழு கொள்ளளவை எட்டிய பிறகு திறந்தால் மட்டுமே விவசாயிகள் கவலையின்றி ஒரு போக நெல்சாகுபடி மேற்கொள்ள இயலும். அதை விடுத்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதை காரணம் காட்டி அவசர கோலத்தில் திறக்கப்பட்டால் விவசாயிகள் நிலை திண்டாட்டம் தான். எனவே ஒரு போக சாகுபடிக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்த பிறகு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்.

    நாச்சியார்பட்டியை சேர்ந்த விவசாயி திருமாறன்: மேட்டூர் அணையில் குறைந்த பட்சம் 90 அடி அளவுக்கு தண்ணீர் வரட்டும். அதன் பின்னர் விவசாயிகளுக்கு உரிய முறையில் முன்னறிவிப்பு செய்து முதல் மடை முதல் கடைமடை வரை தண்ணீர் சென்று சேர வழிவகை செய்து ஒரு போக நெல் சாகுபடி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கிறது என்ற ஒரே காரணத்தை மட்டும் வைத்து கொண்டு தண்ணீரை திறந்தால் விவசாயிகளை திரிசங்கு சொர்க்க நிலைக்கு தள்ளிவிடும்.

    மேற்கண்டவாறு விவசாயிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    கர்நாடக அணைகளில் இருந்து வரும் தண்ணீர் எத்தனை நாட்களுக்கு வரும் என்பது உறுதியாக தெரியாத நிலை உள்ளது. மழை நின்று விட்டால் தண்ணீர் வரத்து குறைந்துவிடும். மதுரைக்கு வந்த கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கே வேலை இல்லை என்று கூறியுள்ளார். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உறுப்பினர் பெயரை அறிவிக்காத கர்நாடக முதல்-மந்திரி இப்படி சொல்வது எந்த நோக்கத்துக்காக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கபட வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தப்பட்டதோ அதை அவமதிப்பது போன்று உள்ளது.

    இன்றைய நிலையில் காவிரியில் கர்நாடகம் உபரிநீரைதான் திறந்து விட்டுள்ளது. தமிழகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் வழங்கப்பட வேண்டிய உரிமை தண்ணீரை பெற்று தமிழக விவசாயிகள் நிம்மதியாக சாகுபடி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் எண்ணமாக உள்ளது
    Next Story
    ×