search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவைக்கு பட்ஜெட் ஒப்புதல் பெற அனைத்து கட்சிகளுடன் டெல்லியில் போராட்டம்- அ.தி.மு.க. வலியுறுத்தல்
    X

    புதுவைக்கு பட்ஜெட் ஒப்புதல் பெற அனைத்து கட்சிகளுடன் டெல்லியில் போராட்டம்- அ.தி.மு.க. வலியுறுத்தல்

    புதுச்சேரிக்கு பட்ஜெட் ஒப்புதல் பெற அனைத்து கட்சியையும் அழைத்து டெல்லியில் போராட்டம் நடத்துமாறு முதல்வர் நாராயணசாமியை அ.தி.மு.க. வலியுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் சம்பந்தமான மாநில முதல்- அமைச்சர்கள் மாநாட்டில் புதுவை மாநில நலன் குறித்து மாநில முதல்-அமைச்சர் என்கிற முறையில் நல்ல கருத்துக்களை பிரதமரிடம் கொண்டு செல்வதில் நாராயணசாமி தவறிவிட்டார்.

    திட்டக்குழுவின் கூட்டம் கலைக்கப்பட்டு நிதி ஆயோக் ஆரம்பிக்கப்பட்ட பிறகு இந்தியாவின் எந்த மாநிலத்திலும் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கக்கூடாது என கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாநில அந்தஸ்து கேட்பதை தவிர்த்து கிடைக்காத வழங்க முடியாத சட்டத்திற்கு உட்படாத சிறப்பு மாநில அந்தஸ்தை கேட்பது என்பது சிறு பிள்ளைத்தனமான நடவடிக்கையாகும்.

    அற்ப அரசியல் காரணங்களுக்காக தனது அமைச்சரவையில் உள்ள கருத்து பிரிவினை சூழல் காரணமாக சிறப்பு மாநில அந்தஸ்து கேட்பது என்பது நாராயணசாமி புதுவை மக்களுக்கு செய்யும் துரோகமாகும். தற்போது அமைச்சராக உள்ள ஒருவரே எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அவரின் நலனுக்காக கிடைக்காத ஒரு சிறப்பு மாநில அந்தஸ்தை முன்வைப்பது நாராயணசாமிக்கு அழகல்ல.

    கவர்னரை பற்றி கூட்டத்தில் தேவையில்லாமல் விமர்சித்து கருத்துகளை தெரிவிப்பதும் அதற்கு மத்திய உள்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்ததும் மாநிலத்திற்கு இழுக்கான செயலாகும். பட்ஜெட் கூட போடமுடியாமல் முழுமையாக தோல்வியை தழுவிய நாராயணசாமி மத்திய அமைச்சராக இருந்த போது கூறுவது போல் தற்போதும் நிதி இன்று வந்துவிடும் நாளை வந்து விடும் என்று பொய் சாக்கு கூறி வருகிறார்.

    எனவே தனது தோல்வியை ஏற்றுக்கொண்டு முதல்- அமைச்சர் நாராயணசாமி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். டெல்லியில் தங்களது உரிமைக்காக போராடும் முதல்-அமைச்சர் கெஜ்ரிவால் போல் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி செயல்பட வேண்டும்.

    கவர்னரை எதிர்ப்பாக நினைத்துக்கொண்டு ஒரு மையில் சில வார்த்தைகளை கூறுவது அவரின் எதிர்ப்பை நீர்த்துபோகச் செய்வது போல் தெரிகிறது.

    பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்காமல் இருப்பது புதுவை மாநிலத்திற்கு ஒரு இழுக்கை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.

    புதுவை மாநில உரிமையை நிலைநாட்ட முழுமையான போராட்டத்திற்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி முன்வரவில்லை. பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்க அனைத்து கட்சியையும் அழைத்து டெல்லியில் போராட்டம் நடத்த முன்வாருங்கள் இல்லையென்றால் டெல்லியை போல் அனைவரும் கவர்னர் மாளிகையில் போராட்டம் நடத்த முன்வருவோம் என தெரிவித்துள்ளார்.

    நாராயணசாமியின் செயல்படாத தன்மையால் ஆக்டோபஸ் மாதிரி புதுவையை முழுமையாக ஆக்கிரமிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் 7 மருத்துவகல்லூரியில் அரசின் இடஒதுக்கீட்டை பெறுவது சம்பந்தமாக உரிய சட்ட திருத்தத்தை கொண்டு வர வேண்டும். இதற்காக அ.தி. மு.க. சட்டமன்றத்தில் வலியுறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×