search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி தாளாளர் தர்மராஜ்பிரபு
    X
    பள்ளி தாளாளர் தர்மராஜ்பிரபு

    புதுக்கோட்டை அருகே ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட பள்ளி தாளாளர் நள்ளிரவில் மீட்பு

    புதுக்கோட்டை அருகே ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட பள்ளி தாளாளரை போலீசார் மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவரங்குளம்:

    புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள சண்முகநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் பிரபு (வயது 62). இவர் புதுக்கோட்டையில் மெட்ரிக்குலேசன் பள்ளி நடத்தி வருகிறார். அப்பள்ளியின் தாளாளராகவும் உள்ளார்.

    மேலும் திருவரங்குளம் அருகே உள்ள வேப்பங்குடியில் சொந்த செலவில் கோவில் ஒன்று கட்டியுள்ளார். அந்த கோவிலுக்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை சென்று வழிபடுவது வழக்கம்.

    அதன்படி நேற்று மாலை அவர் வழக்கம் போல் தனது காரில் டிரைவர் தெய்வேந்திரனுடன் சண் முகநாதபுரத்தில் இருந்து கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். அங்குள்ள காட் டுப்பகுதி அருகே செல்லும் போது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் 6 மர்ம நபர்கள் வந்தனர்.

    திடீரென அவர்கள் காரை வழிமறித்ததோடு, டிரைவர் தெய்வேந்திரனை சரமாரி தாக்கி அவரது வாயையும், காருக்குள் இருந்த தர்ம ராஜ் பிரபுவின் வாயையும் துணியால் கட்டினர். இதையடுத்து 6 பேரும் சேர்ந்து அந்த காருடன் 2 பேரையும் கடத்தி சென்றனர்.

    செல்லும் வழியில் தர்மராஜ் பிரபுவின் மகன் முத்துக் குமரனுக்கு போன் செய்த அவர்கள், உங்கள் தந்தையை கடத்தி வைத்துள்ளோம். ரூ.2 கோடி பணம் தந்தால் தான் விடுவோம். இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து உடனடியாக புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வாகன சோதனையை தீவிரப்படுத்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இதையறிந்த கடத்தல் கும்பல் போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க இரவு முழுவதும் புதுக்கோட்டையின் பல்வேறு பகுதிகளில் காருடன் சுற்றி வந்துள்ளனர். இந்தநிலையில் நள்ளிரவு 1 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் கட்டு மாவடி அருகே செல்லும் போது அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்ததை பார்த்து, காரை அங்கேயே விட்டு விட்டு தப்பிச்சென்றனர்.

    இதைப்பார்த்த போலீசார் விரைந்து சென்று 6 பேரையும் பிடிக்க முயன்றனர். ஆனால் 2 பேர் மட்டும் போலீஸ் பிடியில் சிக்கினர். மற்ற 4 பேர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    கடத்தப்பட்ட காரை போலீசார் சோதனையிட்ட போது அதில் இருந்த தர்ம ராஜ்பிரபு, டிரைவர் தெய்வேந்திரன் ஆகியோரை மீட்டனர். போலீசாரிடம் சிக் கிய 2 பேரும் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பணத்துக்காக பள்ளி தாளாளர் தர்மராஜ் பிரபுவை கடத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. வேறு ஏதேனும் காரணத்திற்காக கடத்தினார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி, தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    Next Story
    ×