search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் போராட்டம்
    X

    காஞ்சீபுரம் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் போராட்டம்

    காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் காலதாமதமாக நடப்பதாக கூறி அதிகாரிகளை இரவு வரை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    காஞ்சீபுரம்:

    ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல் கவுன்சிலிங் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகத்தில் நடந்து வருகிறது. இதே போல் காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று காலை வழக்கம் போல் கவுன்சிலிங் தொடங்கியது.

    இதில் மாவட்டத்தில் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுடன் ஆசிரியைகள் பங்கேற்றனர்.

    கவுன்சிலிங் தொடங்கி நீண்ட நேரம் வரை பலருக்கு இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. மேலும் இரவு வரை இந்த கவுன்சிலிங் நீடித்தது. இதனால் இடமாறுதல் கேட்டு வந்த ஆசிரியர்கள் ஆவேசமடைந்தனர்.

    அவர்கள் கவுன்சிலிங் தாமதமாக நடப்பதாக கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்வி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இரவு 10 மணி வரை ஆசிரியர்களின் போராட்டம் நீடித்தது. இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர் செல்வி மற்றும் கல்வி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தாமதமான ஆசிரியர்களுக்கு நாளை (இன்று) மீண்டும் கவுன்சிலிங் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் நள்ளிரவு வரை முதன்மை கல்வி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது கூறியதாவது:-

    இப்போது ஆன்லைன் மூலமே கவுன்சிலிங் நடந்து வருகிறது. இதனால் சர்வரில் ஏற்படும் பிரச்சினையால் காலதாமதம் ஆகிறது. ஒரு ஆசிரியருக்கு சுமார் ½ மணி நேரம் கவுன்சிலிங் நடத்தும் நிலை உள்ளது. இதனால்தான் கால தாமதம் உள்ளது. துறை வாரியாக அனைத்து ஆசிரியர்களுக்கும் இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் இன்று காலை கவுன்சிலிங்கில் பங்கேற்க ஏராளமான ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வந்திருந்தனர். இதில் நேற்று விடுபட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து கவுன்சிலிங் நடந்து வருகிறது.
    Next Story
    ×