search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து - 2 வாலிபர்கள் பலி
    X

    அரியலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து - 2 வாலிபர்கள் பலி

    அரியலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர். துக்க வீட்டிற்கு சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள அஸ்தினாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ரகுபதி (வயது 22). அதே பகுதியை சேர்ந்த தர்மலிங்கத்தின் மகன் இளவரசன்(27). இவரும், ரகுபதியும் உறவினர்கள் ஆவர். இருவரும் கூலிவேலை செய்து வந்தனர். நேற்று மதியம் அஸ்தினாபுரம் அருகே காட்டுபிரியங்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் துக்கம் விசாரிப்பதற்காக ரகுபதியும், இளவரசனும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    ரகுபதி மோட்டார் சைக்கிளை ஓட்ட, பின்னால் இளவரசன் அமர்ந்திருந்தார். அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் அஸ்தினாபுரம் மாதிரி பள்ளி அருகே வந்த போது, முன்னால் சென்ற டிப்பர் லாரியை ரகுபதி முந்தி சென்றார். அப்போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி ரகுபதியும், இளவரசனும் சாலையில் விழுந்தனர்.

    இதற்கிடையில் பின்னால் வந்த டிப்பர் லாரி அவர்கள் மீது ஏறி சென்றது. இதில் ரகுபதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த இளவரசனை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே இளவரசனும் உயிரிழந்தார்.

    விபத்து குறித்து தகவலறிந்த ரகுபதி, இளவரசனின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ரகுபதியின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. மேலும் சம்பவ இடத்திற்கு கயர்லாபாத் போலீசாரும் வந்தனர். அவர்கள் ரகுபதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக தூக்கினர்.

    அப்போது அங்கிருந்த உறவினர்கள் ரகுபதியின் உடலை போலீசார் எடுக்கவிடாமல் தடுத்து, இந்த வழியாக லாரிகள் செல்ல அனுமதிக்கப்படுவதால் விபத்து அதிகளவில் நடக்கிறது. எனவே லாரி போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் சாலையை அகலப்படுத்த கோரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    பின்னர் ரகுபதியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். விபத்தில் இறந்த 2 பேருக்கும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து தொடர்பாக கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×