search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
    X

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரளான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். மேலும் ஊர்வலமும் நடந்தது.
    புதுக்கோட்டை:

    உலகம் முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள ஈத்கா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை செய்ய காலை முதல் முஸ்லிம்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் காலையில் சுமார் 7.30 மணியளவில் பள்ளிவாசல் முன்பு உள்ள திடலில் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். மேலும் இதில் திருவள்ளுவர் பேரவை நிர்வாகிகள் மற்றும் கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டு முஸ்லிம்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தனர். முன்னதாக முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.



    இதேபோல சிறுவர், சிறுமிகள் கைக்குலுக்கி கொண்டும், ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தும் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். இதேபோல புதுக்கோட்டை தெற்கு 3-ம் வீதியில் உள்ள பெரியபள்ளிவாசல், தெற்கு 2-ம் வீதியில் உள்ள பள்ளிவாசல், அண்டக்குளம், கலீப்நகர், மச்சுவாடி, திருக்கோகர்ணம், சின்னப்பாநகர், கைக்குறிச்சி, பாலன்நகர், அடப்பன்வயல், திருவப்பூர், மீன்மார்க்கெட் அருகே, பூங்காநகர் உள்பட புதுக்கோட்டை நகரில் உள்ள பள்ளிவாசல்களில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.

    இதேபோல பொன்னமராவதி இந்திராநகர் மற்றும் கேசராபட்டி பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. பொன்.இந்திராநகர் முஆத் இப்னு ஜபல் ஜீம்மா பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதேபோல கொன்னையூர், வேந்தன்பட்டி, புதுவளவு, அம்மன் கோவில் வீதி, திருக்களம்பூர் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. தொழுகையை தொடர்ந்து முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

    இதேபோல அறந்தாங்கி அலிஜைனம் ஓரியண்டல் அரபிக்பள்ளி வளாகத்தில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். இதேபோல அரசர்குளம், காரணியானேந்தல், வெட்டிவயல், மேற்பனைக் காடு, ரெத்தினகோட்டை, மீமிசல், கோட்டைப்பட்டினம், மணமேல்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் திரளான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

    கந்தர்வகோட்டை பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் கந்தர்வகோட்டை பெரிய பள்ளிவாசல், கல்லாக்கோட்டை பள்ளிவாசல், பெருங்களூர் பள்ளிவாசல், அண்டனூர் பள்ளிவாசல் ஆகிய பள்ளிவாசல்களில் திரளான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

    கீரனூர்-திருச்சி சாலையில் உள்ள குத்பா பள்ளி மைதானத்தில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடைவீதி வழியாக ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு வந்தனர். பின்னர் அங்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

    இதேபோல அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, மாங்குடி, பெருமநாடு, புல்வயல், வயலோகம், பரம்பூர், குடுமியான்மலை, காலாடிப்பட்டி, தென்னலூர் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. அதனைதொடர்ந்து சிறப்பு தொழுகை நடந்தது. பின்னர் உலக அமைதிக்காக கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பள்ளிவாசல்களில் உள்ள அடக்கஸ்தளத்திற்கு சென்று முன்னோர்களுக்காக சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதேபோல திருவரங்குளம், கைகாட்டி, வல்லத்திராக்கோட்டை, ஆலங்குடி உள்பட பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. 
    Next Story
    ×