search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரத்தில் 3 குழந்தைகள் திருமணம் நிறுத்தம்: சைல்டு லைன் நடவடிக்கை
    X

    ராமநாதபுரத்தில் 3 குழந்தைகள் திருமணம் நிறுத்தம்: சைல்டு லைன் நடவடிக்கை

    ராமநாதபுரத்தில் இன்று காலை நடைபெற இருந்த 3 குழந்தை திருமணங்களை சைல்டு லைன் அமைப்பினர் தடுத்து நிறுத்தினர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே உள்ள கரைமேல்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மருது மகன் விஸ்வநாதன் (வயது26). இவருக்கும், நயினார்கோவிலை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் 16 வயது மாணவிக்கும் இன்று காலை அங்குள்ள உச்சநத்தி அம்மன் கோவிலில் திருமணம் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.

    இதேபோல் பரமக்குடி அருகே எலந்தைக்குளம் நிறைதளம் மகன் செல்ல முத்து (28) என்பவருக்கும், பரமக்குடியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் இன்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

    ஏர்வாடி வெட்டன்மனை வீமராஜ் மகன் ஜெயக்குமார் (29) என்பவருக்கும் ஏர்வாடி தர்கா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தது.

    இதுகுறித்த தகவல் ராமநாதபுரம் சைல்டு லைன் அமைப்பினருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சைல்டு லைன் அமைப்பினர் மாவட்ட சமூக நல அலுவலர் குண சேகரி தலைமையில் இளநிலை உதவியாளர் பாண்டியன், சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ், மனித வர்த்தக மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவு கேசவன், வடிவேல், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூக பணியாளர் மகேஸ்வரன், ஏர்வாடி இன்ஸ்பெக்டர் சத்யபிரியா, சைல்டு லைன் அணி தலைவர் ஜார்ஜ், ஜெயக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் திருமணம் நடைபெறவிருந்த பெண்கள் அனைவரும் சிறுமிகள் என தெரியவந்தது. இந்த குழந்தைகளுக்கு திருமணம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோரிடம் அதிகாரிகள் எடுத்துக் கூறினர். பின்னர் அமைப்பினர் குழந்தைகளை அழைத்து வந்து குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர்.

    உறுப்பினர்கள் வீரு, ஜெயக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி குழந்தை திருமணம் குறித்து விளக்கி கூறினர். இதையடுத்து திருமணத்தை நிறுத்திக் கொள்வதாக பெற்றோர் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர்.

    Next Story
    ×