search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியநாயக்கன்பாளையம் அருகே சிறுத்தை நடமாட்டம் கண்டுபிடிப்பு
    X

    பெரியநாயக்கன்பாளையம் அருகே சிறுத்தை நடமாட்டம் கண்டுபிடிப்பு

    பெரியநாயக்கன்பாளையம் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட 7 வனச்சரகங்களிலும், 2018 ஆண்டிற்கான புலிகள் கணக்கெடுப்பு பணி கடந்த 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெற்றது.

    இதில் பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட, பால மலை வனப் பகுதி, நாயக்கன்பாளையம், தோலம்பாளையம், ஆனைக்கட்டி, கோபனாரி உள்ளிட்ட அனைத்து வனப்பகுதிகளில் வனத்துறையினர் புலிகள் நடமாட்டம் குறித்து, அடர்ந்த வனப்பகுதி, நீர்நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். இதில் பாலமலை வனப்பகுதியில் பல இடங்களில், சிறுத்தையின் கால்தடம் பதிந்து இருந்தது தெரியவந்தது.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, பெரிய நாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் மான்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால், சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், புலி இருப்பதற்கான கால்தடம் எதுவும் கண்டறியப்படவில்லை.

    மேலும் கரடி, காட்டு மாடுகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளும் இங்கு இருப்பது அதன் கால் தடங்கள், கழிவு எச்சங்கள் மூலம் தெரியவந்துள்ளது என்று தெரிவித்தனர். இது குறித்து பாலமலை மற்றும் நாயக்கன்பாளையம் பகுதிகளில் உள்ள விவசாயிகள் கூறும்போது, நாங்கள் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வருகிறோம். எங்களுக்கு பல வருடங்களாகவே யானைகள் தொந்தரவு உள்ளது. இதனால் விவசாயம் செய்யமுடியாமல் எங்களில் பல பேர் மற்ற வேலைக்கு சென்று விட்டனர். தற்போது பாலமலை பகுதியில் அகழி வெட்டியுள்ளனர். இந்த நிலையில் சிறுத்தை நடமாட்டம் என்பது எங்களுக்கு மிகவும் வேதனை அளித்துள்ளது.

    நாங்கள் விவசாயம் மட்டும் செய்யாமல் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறோம். சிறுத்தை இருந்தால் ஆடு, மாடுகளை வளர்க்கமுடியாது. இதற்கு வனத்துறையினர் முன் கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    Next Story
    ×