search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் நீட் தேர்வில் பின்தங்கிய அரசு பள்ளி மாணவர்கள்
    X

    புதுவையில் நீட் தேர்வில் பின்தங்கிய அரசு பள்ளி மாணவர்கள்

    புதுவையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியலை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவர்கள் பின் தங்கிய நிலையில் உள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் நடப்பு கல்வியாண்டில் 4 ஆயிரத்து 573 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.

    இவர்களில் 4 ஆயிரத்து 462 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் ஆயிரத்து 768 மாணவர்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியலை புதுவை அரசு வெளியிட்டுள்ளது.

    சென்டாக் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் புதுவையை சேர்ந்த மாணவர் விக்னேஷ் ரமணன் 552 மதிப்பெண்கள் பெற்று புதுவை மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவர் அக்‌ஷய் 550, அருணாசலம் 503 மதிப்பெண்ணும், ஆகாஷ் அரவிந்த் 498 மதிப்பெண்ணும் எடுத்துள்ளனர்.

    மாநிலத்திலேயே நீட் தேர்வு பட்டியலில் 500 மதிப்பெண்களுக்கு மேல் 3 மாணவர்களும், 400 மதிப்பெண்ளுக்கு மேல் 32 மாணவர்களும் எடுத்துள்ளனர். 150 மாணவர்கள் 200 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.

    புதுவையை பொறுத்த வரை நீட் தேர்வில் 250 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் மாணவர்களுக்கு மட்டுமே எம்.பி.பி.எஸ். பயில இடம் கிடைக்கும். அரசு பள்ளி மாணவர்களுக்காக ஜீவானந்தம் மேல்நிலைப் பள்ளியிலும், திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியிலும் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.

    இதில் ஜீவானந்தம் பள்ளியில் 101 மாணவ- மாணவிகள் பயிற்சி பெற்றார்கள். இதில் 21 மாணவ- மாணவிகள் தகுதி பெற்றுள்ளனர். இதில் 12 மாணவர்கள் தனியார் பள்ளியையும், 9 மாணவர்கள் அரசு பள்ளியையும் சேர்ந்தவர்கள். அரசு பள்ளியை சேர்ந்த மாணவர் ஒருவர் அதிகபட்சமாக 138 மதிப்பெண்கள் எடுத்து தகுதி பெற்றிருக்கிறார்.

    இதேபோல் திருவள்ளுவர் பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவிகள் நீட் தேர்வு பயிற்சி பெற்றனர். இவர்களில் 18 மாணவிகள் நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே அரசு பள்ளி மாணவிகள். ஆனால், யாருமே 150 மதிப்பெண்களுக்கு மேல் பெறவில்லை.

    இவர்கள் தவிர, அரசு பள்ளியில் படித்து தனியார் நீட் தேர்வு மையத்தில் படித்த மாணவர்களும் உண்டு. ஆனால், அவர்களும் 200-க்கும் மேல் மதிப்பெண்கள் எடுத்ததாக தெரியவில்லை. இதனால் சென்டாக் மூலம் எம்.பி.பி.எஸ். படிக்க தேர்வாகும் மாணவர்களில் ஓரிரு மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளியை சேர்ந்தவர்களாக இருக்க முடியும்.

    ஏற்கனவே கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சென்டாக்கில் எம்.பி.பி.எஸ். அரசு இடங்கள் குறைவாகவே கொடுக்கப்பட இருக்கிறது. ஏனெனில் பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 150 இடங்களை 100 ஆக இந்திய மருத்துவ கவுன்சில் குறைத்துவிட்டது. இதனால் இந்த ஆண்டு 150-க்கும் குறைவான எம்.பி.பி.எஸ். இடங்களே அரசுக்கு கிடைக்கும். #NeetExam
    Next Story
    ×