search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவாரத்தில் தொடரும் யானை அட்டகாசம் - குடும்பத்துடன் போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு
    X

    தேவாரத்தில் தொடரும் யானை அட்டகாசம் - குடும்பத்துடன் போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு

    தேவாரத்தில் உயிர் பலி வாங்கிய மக்னா யானை மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளதால் கிராம மக்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் தேவாரம், போடி மெட்டு, பொட்டிபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஒற்றை மக்னா யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இரவு நேரங்களில் தோட்டத்துக்கு வரும் இந்த யானை விளைநிலங்களை சேதப்படுத்துவதுடன் பொதுமக்களையும் விரட்டி வருகிறது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு சேகர் என்ற தோட்ட தொழிலாளியை அடித்துக் கொன்றது. இந்த யானை இது வரை 9 பேரை காவு வாங்கிய பிறகும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

    தோட்ட தொழிலாளி சேகர் உயிரிழந்த பிறகு அவரது உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மற்ற யானைகள் நடமாட்டம் இப்பகுதியில் இருந்த போதும் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை. ஆனால் மக்னா யானை மட்டும் தொடர்ந்து உயிர்களை பலி வாங்கி வருகிறது.

    எனவே இந்த யானையை மயக்க மருந்து கொடுத்து வேறு பகுதியில் கொண்டு விட வேண்டும் என்று தெரிவித்தனர். மாவட்ட வன அலுவலரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளித்தார்.

    ஆனால் அது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று இரவு மீண்டும் மக்னா யானை அதே பகுதியில் புகுந்து தென்னை மற்றும் பலா தோட்டங்களை சேதப்படுத்தி சென்றது.

    எனவே தேவாரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இரவு நேரங்களில் தோட்டங்களில் யாரும் தங்க வேண்டாம் என தண்டோரா மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. யானையின் அட்டகாசத்தை தடுக்க வலியுறுத்தி தேவாரம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×