search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேசன் கடைகளில் 20 கிலோ அரிசிக்கு 17 கிலோ வழங்கிய ஊழியர்கள்- பொதுமக்கள் அதிர்ச்சி
    X

    ரேசன் கடைகளில் 20 கிலோ அரிசிக்கு 17 கிலோ வழங்கிய ஊழியர்கள்- பொதுமக்கள் அதிர்ச்சி

    திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள அங்காடிகளில் 20 கிலோ அரிசி வழங்குவதற்கு பதிலாக ஊழியர்கள் குறைத்து 17 கிலோ வழங்குவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    திருச்சிற்றம்பலம்:

    திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள அங்காடிகளில் கடந்த 2 மாதங்களாக ரேசன் அரிசியின் அளவு குறைத்து வழங்கப்படுவதாக பட்டுக்கோட்டை வட்டவழங்கல் அதிகாரியிடம் பொதுமக்கள் நேரில் புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகத்தின் கீழ் 8 முழுநேர அங்காடிகளும் 9 பகுதி நேர அங்காடிகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சீனி, பாமாயில், மண்ணெண்ணை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக திருச்சிற்றம்பலம் பகுதிகளில் உள்ள அங்காடிகளில் வழக்கமாக வழங்கப்படும் ரேசன் அரியை வழங்காமல், அளவு குறைத்து வழங்குவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதாவது ஒரு ரேசன் கார்டுக்கு 20 கிலோ அரிசியும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு சிறப்பு திட்டத்தின் கீழ் 35 கிலோ அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது.

    ஆனால், கடந்த 2 மாதங்களாக 20 கிலோ அரிசிக்கு பதிலாக 17 கிலோவும், 35 கிலோவுக்கு பதிலாக 30 கிலோ அரிசியும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், அலைபேசிகளில் குடும்ப அட்டைதாரருக்கு 17 கிலோவிற்கு பதிலாக 20 கிலோவும் 30 கிலோவிற்கு பதிலாக 35 கிலோ ரேசன் அரிசியும் எஸ்.எம்.எஸ். வந்துள்ளன. இதுபற்றி அங்காடி விற்பனையாளரிடம் கேட்டால் ரேசன் அரிசியினை அரசு குறைவாக அனுப்பி உள்ளதாக கூறுகின்றனர். கொடுக்கப்படும் அளவிற்கு ஏற்ப குறுந்தகவல் அனுப்பாமல் கூடுதலாக ரேசன் அரிசி வழங்கியதாக வந்த தகவல் பற்றி கேட்டால் உரிய பதில் இல்லை.

    எனவே, இனியும் தாமதிக்காமல், திருச்சிற்றம் பலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் அங்காடிகளில் உள்ள அனைத்து பதிவேடுகளையும் முழு ஆய்வு செய்து, குறைவாக ரேசன் அரிசி வழங்கிய நபர்களுக்கு அந்த அரிசியினை மீண்டும் வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர், தஞ்சை மாவட்ட கலெக்டர் மற்றும் பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோருக்கு திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
    Next Story
    ×