search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய தொழில் முனைவோர்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும் - கலெக்டர் பேச்சு
    X

    புதிய தொழில் முனைவோர்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும் - கலெக்டர் பேச்சு

    புதிய தொழில் முனைவோர்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும் என்று வங்கியாளர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் அன்பழகன் கூறினார்.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புதிய தொழில்முனைவோரை உருவாக்கும் பொருட்டு தாட்கோ மூலம் வங்கிகளுக்கு பரிந்துரை செய்த நிலுவை விண்ணப்பதாரர்கள் மற்றும் வங்கியாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    வாழ்வில் பின்தங்கிய நிலையிலுள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு தாட்கோ மூலம் பல்வேறு பயிற்சி மற்றும் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதில், குறிப்பாக புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்காக தனி நிதி ஒதுக்கீடுகளை வழங்கி அதிகப்படியான மானியங்களுடன் கூடிய வங்கி கடனுதவிகளை வழங்கி வருகிறது.

    அதனடிப்படையில், தையல், ஆயத்த ஆடை தயாரித்தல், உணவகத்தொழில் அரிசி ஆலை, பால்பண்ணை, துறைவாரியாக பண்டக சாலை, சுற்றுலா வாகனம், இரும்புக்கடை, டிஜிட்டல் ஸ்டூடியோ உள்ளிட்ட வருமானம் தரக்கூடிய தொழில்களை மேற்கொள்வதற்கான தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட பகுதி சேவை வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

    கரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெறப்பட்ட 89 மனுக்கள் மீது நிலுவை தொடர்பான கலந்தாய்வு கூட்டம் விண்ணப்பதாரர்கள் முன்னிலையில் வங்கியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு தகுதி வாய்ந்த நபர்களுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அலுவலர்களும் மனுதார்கள் நிலையிலிருந்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு புதிய தொழில் முனைவோர்களை அதிக அளவில் உருவாக்கிட உதவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவிச்சந்திரன், தாட்கோ திட்ட மேலாளர் எம்.பி.முரளிதரன் மற்றும் அனைத்து வங்கியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×