search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான நிலைய மோதல் வழக்கு: திருச்சி கோர்ட்டில் சீமான் இன்று ஆஜர்
    X

    விமான நிலைய மோதல் வழக்கு: திருச்சி கோர்ட்டில் சீமான் இன்று ஆஜர்

    விமான நிலையத்தில் நடந்த மோதல் வழக்கு தொடர்பாக திருச்சி கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜரானார். #vaiko #seeman #naamtamilarkatchi

    திருச்சி:

    திருச்சியில் நடைபெற்ற வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த மாதம் 19-ந்தேதி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தனர்.

    முதலில் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்துவிட்டு புறப்பட்டு சென்றார். அப்போது சீமான் குறித்து வைகோ கருத்து தெரிவித்ததாக கூறி, நாம் தமிழர் கட்சி தொண்டர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதையடுத்து ம.தி.மு.க. வினர் மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மோதிக் கொண்டனர். இதில் கைகளாலும், கம்புகளாலும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டார்கள். மேலும் விமான நிலையத்தில் இருந்த பேரிகார்டுகள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

    இந்த மோதல் சம்பவத்தில் ம.தி.மு.க.வினர் சிலரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து திருச்சி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வெல்லமண்டி சோமு விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பிரபு உள்பட 14 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதேபோல் விமான நிலையத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக விமான நிலைய போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் மற்றொரு வழக்கும் சீமான் உள்ளிட்ட 14 பேர் மீது பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வினோத், மதியழகன், சதீஸ்குமார், மணிகண்டன், குணா, நாகேந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த மாதம் 21-ந்தேதி சரண் அடைந்தனர். போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் இந்த மோதல் சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட ம.தி.மு.க. செயலாளர் வெல்லமண்டி சோமு உள்ளிட்டோர் திருச்சி கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் பெற்றனர்.

    சீமான் உள்ளிட்ட மற்றவர்களை போலீசார் தேடி வந்தனர். இதற்காக திருச்சி போலீசார் சென்னையில் முகாமிட்டு இருந்தனர். இதற்கிடையே சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் மதுரை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனு செய்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் சீமான் உள்ளிட்டோர் திருச்சி கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டது.

    அதன்படி சீமான், திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு, நிர்வாகிகள் கரிகாலன், குகன்குமார், கந்தசாமி, துரைமுருகன், இனியன் பிரசாத் ஆகிய 7 பேரும் இன்று காலை திருச்சி 5-வது ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி நாகப்பன் முன்பு சரணடைந்து ஜாமீன் பெற்றனர். இதற்கான ஜாமீன் தொகையினையும் அவர்கள் செலுத்தினர். பின்னர் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

    இதையடுத்து வெளியே வந்த சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்களுக்காக போராடும் எங்கள் மீது தொடர்ந்து பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. விமான நிலையத்தில் நடந்த மோதல் சம்பவத்தின்போது நான் அந்த இடத்திற்கு வரவேயில்லை. ஆனால் என் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை எண்ணி பார்ப்பதற்குள் என்னுடைய ஆயுள் முடிந்துவிடும் என்று நினைக்கிறேன். நாங்கள் ஜனநாயகத்தின்படியும், மக்களாட்சி தத்துவத்தின் படியும் போராட்டம் நடத்துகிறோம். ஆனால் ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தின்படி நடக்க வில்லை.

    இந்த அரசு அதிகாரம் உள்ளிட்ட அனைத்திலும் தோல்வி அடைந்துவிட்டது. அதனால்தான் ஜனநாயக ரீதியில் போராடும் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்கிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நியாயப்படி தகுதி நீக்கம் என்பது செல்லாது என அறிவிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக சீமான் கோர்ட்டில் ஆஜரானதையொட்டி திருச்சி கண்டோன் மென்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், சப்- இன்ஸ்பெக்டர் அலாவுதீன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  #vaiko #seeman #naamtamilarkatchi 

    Next Story
    ×