search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன் கோபுரங்களில் பேட்டரிகள் திருட்டு: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
    X

    செல்போன் கோபுரங்களில் பேட்டரிகள் திருட்டு: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

    செல்போன் கோபுரங்களில் பேட்டரிகளை திருடி விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    சேலம்:

    சேலம் அருகே உள்ள அயோத்தியாப்பட்டணம் பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 23). இவர் கடந்த மார்ச் மாதம் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் பி.எஸ்.என்.எல். மற்றும் தனியார் செல்போன் நிறுவனங்களின் கோபுரங்களில் பேட்டரிகளை திருடி விற்றார். இதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

    இதுதொடர்பாக மணிகண்டன் மீது சேலம் மாநகரில் அன்னதானப்பட்டி, கிச்சிப்பாளையம் மற்றும் கொண்டலாம்பட்டி ஆகிய போலீஸ் நிலையங்களிலும், மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி, விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் போலீஸ் நிலையங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் மற்றும் மறைத்து வைத்திருந்த பேட்டரிகள் மீட்கப்பட்டன.

    இந்தநிலையில் கடந்த மாதம் 11-ந் தேதி மணிகண்டன் தனது கூட்டாளி வவ்வால் ரவியுடன் சேர்ந்து கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனி பகுதியில் நடந்து சென்ற முனியப்பனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்தார். இதுதொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    இதனிடையே தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் சேலம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். இதை பரிசீலித்து மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார். 
    Next Story
    ×