search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானிசாகர் அணை நீர்மட்டம் மேலும் 4 அடி உயர்ந்தது
    X

    பவானிசாகர் அணை நீர்மட்டம் மேலும் 4 அடி உயர்ந்தது

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழைதண்ணீர் பவானிசாகர் அணைக்கு வந்து சேருவதால் நேற்று ஒரே நாளில் மட்டும் 4 அடி உயர்ந்துள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்வது பவானிசாகர் அணை ஆகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கிராம மக்களின் குடிநீர் தேவையையும் பவானிசாகர் அணை தண்ணீர் பூர்த்தி செய்து வருகிறது.

    இந்த அணைக்கு நீலகிரி மாவட்ட மலை பகுதியில் இருந்து தண்ணீர் வருகிறது. அங்கு மழை பெய்யும்போது அந்த தண்ணீர் பில்லூர் அணைக்கு வந்து அந்த அணை நிரம்பி பவானி ஆற்றின் வழியாக பவானிசாகர் அணைக்கு வந்து சேரும்.

    தற்போது நீலகிரி மலை பகுதியிலும், கேரளாவிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது. எனவே அந்த அணை நிரம்பி கடந்த 4 நாட்களாக உபரிநீர் வெளியேறுகிறது.

    இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அந்த தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி பவானிசாகர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. கடந்த 4 நாட்களாக வரும் இந்த தண்ணீர் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது.

    நேற்று காலை நிலவரப்படி அணைக்கு 15 ஆயிரத்து 186 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் நேற்று முன்தினம் 57 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 62 அடியாக உயர்ந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரித்தது. இதனால் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணைக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் மேலும் 4 அடி உயர்ந்து 66.17 அடியாக உள்ளது.

    அணையில் நீர் இருப்பு 9.4 டி.எம்.சி.யாகும். அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி தண்ணீரும், குடிநீருக்காக பவானி ஆறு வழியாக 200 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து அதிக அளவில் மழை பெய்து வருவதாலும், கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து 4-வது நாளாக பில்லூர் அணை நிரம்பி பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும் பவானிசாகர் அணை நிரம்புமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
    Next Story
    ×