search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டியில் 2 பஸ்கள் உடைப்பு- தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 2 பேர் கைது
    X

    பண்ருட்டியில் 2 பஸ்கள் உடைப்பு- தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 2 பேர் கைது

    வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி பண்ருட்டியில் 2 பஸ்களின் மீது கல்வீசி கண்ணாடி உடைத்த வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் அதன் தலைவர் வேல்முருகன் தலைமையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சுங்கச்சாவடியை அடித்து உடைத்து சூறையாடினர்.

    இது தொடர்பாக வேல்முருகனை போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவர் நெய்வேலியில் நடந்த கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்ட வேல்முருகனை விடுதலை செய்யக் கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

    மேலும் பல்வேறு இடங்களில் பஸ்களின் கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலூரில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

    வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சதித்திட்டம் தீட்டியதாக கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பஸ் ஒன்று புதுவைக்கு சென்று கொண்டிருந்தது.

    திருவதிகை அருகே சென்ற போது மர்ம மனிதர் ஒருவர் அந்த பஸ் மீது கல்வீசினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவதிகையை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் வார்டு செயலாளர் சக்தி என்பவரை கைது செய்தனர்.

    இதேபோல் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சென்ற அரசு பஸ் மீது கல்வீசி தாக்கப்பட்டது. இது தொடர்பாக பண்ருட்டி மணிநகரை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த பாபு (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். #Tamilnews
    Next Story
    ×