search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் கியாஸ் சப்ளை- எண்ணை நிறுவனங்கள் முடிவு
    X

    சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் கியாஸ் சப்ளை- எண்ணை நிறுவனங்கள் முடிவு

    சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் கியாஸ் சப்ளை செய்ய எண்ணை நிறுவனங்கள் ஏற்பாடு செய்து வருகிறது. #CookingGas
    சென்னை:

    சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் கியாஸ் ‘சப்ளை’ செய்ய எண்ணை நிறுவனங்கள் ஏற்பாடு செய்து வருகிறது.

    இதுகுறித்து எண்ணை நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் வீட்டு உபயோகத்துக்கும், ஓட்டல்களுக்கும் தனித்தனியாக வெவ்வேறு அளவில் உள்ள சிலிண்டர்களில் சமையல் கியாஸ் ‘டோர்’ டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.

    நாடு முழுவதும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 23 கோடி பேர் உள்ளனர். தமிழகத்தில் 1 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

    இந்த சிலிண்டர்களை வினியோகம் செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை எண்ணை நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.


    வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்யும் ஊழியர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் வருகின்றன.

    இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக பூமிக்கடியில் குழாய் பதித்து வீடுகளுக்கு சமையல் கியாஸ் வினியோகம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    தற்போது டெல்லி, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் கியாஸ் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    அதே போல் தமிழகத்தில் முதற் கட்டமாக சென்னையில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் கியாஸ் வினியோகம் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்காக டெண்டர் விடப்பட்டு உள்ளது.

    எண்ணூரில் இயற்கை எரிவாயு முனையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் சென்னையில் பூமிக்கடியில் வீதி வீதியாக குழாய் பதிக்கும் பணி நடைபெறும்.

    குடிநீர் குழாய் பதிப்பது போன்று சமையல் கியாசை கொண்டு செல்ல குழாய் பதிக்கப்படும். இதில் இருந்து கனெக்‌ஷன் பெறுபவர்களது வீடுகளில் மீட்டர் பொருத்தப்பட்டு கணக்கிடப்படும்.

    வீட்டுக்கு வரும் குழாய்களில் குறைந்த அழுத்தத்தில் கியாஸ் செலுத்தப்படும். சிலிண்டரில் சமையல் கியாஸ் கொண்டு செல்வதை விட இது மிகவும் பாதுகாப்பானதாகும்.

    வழக்கமாக சிலிண்டர்களுக்கு செலவிடப்படும் தொகையை விட இதற்கு செலவு குறைவாக இருக்கும்.

    குறிப்பாக சிலிண்டர்களை வினியோகம் செய்யும் ஊழியர்களுக்கு கூடுதல் தொகை கொடுப்பது மிச்சமாகும். அத்துடன் சிலிண்டர் வாங்க ‘புக்கிங்’ செய்து விட்டு நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

    சென்னையில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒவ்வொரு சமையல் அறைக்கும் குழாய் மூலம் கியாஸ் பெறும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #CookingGas
    Next Story
    ×