search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் இன்று பணிக்கு திரும்பினர்
    X

    சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் இன்று பணிக்கு திரும்பினர்

    சங்கரன்கோவிலில் கடந்த 40 நாட்களாக நடந்து வந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் இன்று முதல் விசைத்தறிகள் வழக்கம் போல் இயங்க தொடங்கின.
    நெல்லை:

    சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 60 சதவீதம் கூலி உயர்வு, விடுமுறை கால சம்பளம் ரூ. 300 என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இதேபோல் சுப்புலாபுரம் கிராம பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களும் கூலி உயர்வு கேட்டு போராடி வந்தனர். இதனால் பல கோடி ரூபாய் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கூலி உயர்வு தொடர்பாக நெல்லை தொழிலாளர் துறை அதிகாரிகள் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர் களுடன் ஏற்கனவே 4 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த நிலையில் பாளையில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் 5-வது கட்டமாக முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    நீண்டநேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. முடிவு எதுவும் எட்டவில்லை. இதனால் பேச்சுவார்த்தை 5-வது முறையாக‌ தோல்வியில் முடிவடைந்தது.

    இதையடுத்து கடந்த 5-ந்தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நேற்று 40-வது நாளாக நீடித்தது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சுமார் 20 கோடி ரூபாய் வரையிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் பாளையில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழிற் சங்கத்தினர், விசைத்தறி உரிமையாளர்கள், அதிகாரிகள் தரப்பு என முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

    இதில் அனைத்து தொழிலாளர்களுக்கும் 19 சதவீத கூலி உயர்வு, விசைத்தறி உரிமையாளர்களுக்கு 17 சதவீத ஒப்பந்த தொகை உயர்வு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

    இதை தொடர்ந்து கடந்த 40 நாட்களாக நடந்து வந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் இன்று முதல் விசைத்தறிகள் வழக்கம் போல் இயங்க தொடங்கின.

    Next Story
    ×