search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமுறுக்கல் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம்: கிராம மக்கள் பீதி
    X

    திருமுறுக்கல் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம்: கிராம மக்கள் பீதி

    அஞ்செட்டி அருகே திருமுறுக்கல் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே திருமுறுக்கல் என்ற இடத்தில் கொண்டை ஊசி வளைவில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த பகுதி தேன்கனிக்கோட்டையில் இருந்து ஒகேனக்கல் செல்லும் முக்கிய சாலையாகும். இந்த வழியாக பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    அந்த வனப்பகுதியில் ஒரு வாரமாக 15 யானைகள் இரவு பகலாக சுற்றித்திரிகின்றன. மேலும் யானைகள் கூட்டம் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி சாலைக்கு வருகின்றன. இதனால் இந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்றனர். அவர்கள் யானைகள் நடமாட்டம் குறித்து சாலையோரம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை பலகை வைத்தனர்.

    மேலும் யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டிட தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். யானைகள் நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். அஞ்செட்டி வனச்சரகர் தனபால் கூறுகையில் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் கிராமமக்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்ல வேண்டாம். யானைகள் நடமாட்டம் குறித்து கிராமமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் ஹாரன்கள் அடித்தும், முகப்பு விளக்கை எரியவிட்டும் செல்லவேண்டும். யானைகள் வரும் பகுதியை யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று எச்சரித்தார். 
    Next Story
    ×