search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றபின் கவர்னர் மாளிகை செலவு பெருமளவில் குறைந்தது
    X

    பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றபின் கவர்னர் மாளிகை செலவு பெருமளவில் குறைந்தது

    தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்ற பின், அவரது சிக்கன நடவடிக்கையால் கவர்னர் மாளிகை செலவு பெருமளவு குறைந்து உள்ளது.
    சென்னை:

    தமிழக கவர்னராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 30-ந் தேதி பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றார். அவர் பதவியேற்ற பின், கவர்னர் மாளிகையில், பெருமளவு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார். அவர் தனது சுற்றுப்பயணத்தின்போது, கூடுமானவரை ரெயில்களில் பிரயாணம் செய்கிறார். விமானத்தில் பயணம் செய்வது என்றால், அரசு விமானத்தையோ, ஹெலிகாப்டரையோ எடுத்து பயணிப்பது இல்லை. சாதாரண விமானத்தில் மற்ற பயணிகளோடு பயணியாக பயணம் செய்து வருகிறார். கவர்னர் மாளிகையின் செலவுகளிலும், சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார்.

    முன்னதாக 2015-2016-ல் கவர்னர் மாளிகையின் உணவு செலவு மற்றும் விருந்தினர் செலவாக 29 லட்சத்து 24 ஆயிரத்து 325 ரூபாயும், 2016-2017-ல் 44 லட்சத்து 27 ஆயிரத்து 297 ரூபாயும், 1.4.2017 முதல் பன்வாரி லால் புரோகித் பதவி ஏற்கும் வரை அதாவது 30.9.2017 வரை 41 லட்சத்து 74 ஆயிரத்து 733 ரூபாயும் செலவாகி இருந்தது.

    இதே போன்று, இதே காலகட்டங்களில் முறையே போக்குவரத்து செலவாக 25 லட்சத்து 31 ஆயிரத்து 836 ரூபாயும், 21 லட்சத்து 46 ஆயிரத்து 613 ரூபாயும், 80 லட்சத்து 55 ஆயிரத்து 405 ரூபாயும், தோட்டச் செலவாக 9 லட்சத்து 97 ஆயிரத்து 798 ரூபாயும், 15 லட்சத்து 6 ஆயிரத்து 823 ரூபாயும், 11 லட்சத்து 98 ஆயிரத்து 780 ரூபாயும், பெட்ரோல், டீசல் செலவாக 5 லட்சத்து 26 ஆயிரத்து 263 ரூபாயும், 4 லட்சத்து 92 ஆயிரத்து 93 ரூபாயும், 1 லட்சத்து 98 ஆயிரத்து 146 ரூபாயும், துப்புரவு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக 5 லட்சத்து 13 ஆயிரத்து 125 ரூபாயும், 2 லட்சத்து 48 ஆயிரத்து 872 ரூபாயும், 3 லட்சத்து 24 ஆயிரத்து 625 ரூபாயும், மின் கட்டணமாக 58 லட்சத்து 88 ஆயிரத்து 755 ரூபாயும், 55 லட்சத்து 14 ஆயிரத்து 797 ரூபாயும், 28 லட்சத்து 56 ஆயிரத்து 737 ரூபாயும் செலவாகி இருந்தது.

    ஆக மொத்தத்தில் இந்த இனங்களில் 2015-2016-ல் ஒரு கோடியே 33 லட்சத்து 82 ஆயிரத்து 102 ரூபாயும், 2016-2017-ல் 1 கோடியே 43 லட்சத்து 36 ஆயிரத்து 495 ரூபாயும், 1.4.2017 முதல் 30.9.2017 வரை 1 கோடியே 68 லட்சத்து 8 ஆயிரத்து 426 ரூபாயும் செலவாகி இருந்தது.

    பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்ற உடன் மேற்கொண்ட சிக்கன நடவடிக்கைகளால் 1.10.2017 முதல் 31.3.2018 வரை உணவு மற்றும் விருந்தினர் செலவாக 9 லட்சத்து 22 ஆயிரத்து 673 ரூபாயும், போக்குவரத்து செலவாக 4 லட்சத்து 74 ஆயிரத்து 955 ரூபாயும், தோட்ட செலவாக 2 லட்சத்து 83 ஆயிரத்து 335 ரூபாயும், பெட்ரோல் டீசல் செலவாக 1 லட்சத்து 86 ஆயிரத்து 407 ரூபாயும், துப்புரவு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக 64 ஆயிரத்து 906 ரூபாயும், மின்கட்டணமாக 10 லட்சத்து 99 ஆயிரத்து 145 ரூபாய் மட்டுமே செலவாகி உள்ளது. ஆக இவை அனைத்துக்கும் சேர்த்து மொத்தத்தில், 30 லட்சத்து 31 ஆயிரத்து 421 ரூபாய் செலவாகி உள்ளது.

    இந்த செலவுகளை இனிவரும் காலகட்டங்களில் மேலும் குறைக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டுள்ளார். 
    Next Story
    ×