search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனாட்சி அம்மன் கோவில் அருகே தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரி எம்.எல்.ஏ. கோரிக்கை
    X

    மீனாட்சி அம்மன் கோவில் அருகே தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரி எம்.எல்.ஏ. கோரிக்கை

    மீனாட்சி அம்மன் கோவில் அருகே தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
    மதுரை:

    தமிழக சட்டசபையில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் நடந்த மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் 22,336 கிலோமீட்டர் உயர் மின் பாதைகளும், 68,728 தாழ் வழுத்த மின் பாதைகளும் 87,187 கிலோமீட்டர் மின் மாற்றிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ மின்சாரத்துறையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் 80,000 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் இவர்களின் சிறப்பான செயல்களின் மூலம் தானே மற்றும் ஒக்கி புயல் போன்ற இயற்கைச்சீற்றங்களில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.

    தொடர்ந்து மின்சாரத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அவர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து வரும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் மின்சாரத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    மதுரை வடக்குத் தொகுதியில் கலெக்டர் அலுவலகத்தில் புதிய கட்டிடம் கட்ட முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அடிக்கல் நாட்டினர். இதற்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அந்த புதிய கட்டிடம் கட்டும் இடத்தில் ஏற்கனவே உள்ள தீயணைப்பு நிலையம் அப்புறப்படுத்தப்பட்டு வேறு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு கட்டிடம் கட்ட நிதியினை முதலமைச்சர் ஒதுக்கித்தர வேண்டும்.

    அதே போல் மீனாட்சியம்மன் கோவில் அருகே தீயணைப்பு நிலையம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.

    பந்தல் குடி கால்வாய் சுத்தம் செய்ய ரூ.14 கோடி அளவில் திட்டம் வந்துள்ளது. அதையும் விரைவாக நிறைவேற்றிதர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    வண்டியூர் கண்மாயை சுற்றுலாத்துறை மூலம் ரூ.26 கோடி அளவில் திட்டம் வகுத்துள்ளார்கள் அந்த திட்டத்தினை சுற்றுலாத் துறை மூலம் நிறைவேற்றித் தருமாறு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×