search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருடப்பட்ட தங்கம்-வெள்ளி சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தல் - ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தகவல்
    X

    திருடப்பட்ட தங்கம்-வெள்ளி சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தல் - ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தகவல்

    தஞ்சை பெரிய கோவிலில் திருடப்பட்ட தங்கம்-வெள்ளி சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளன என்றும், அவற்றை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தெரிவித்தார்.
    சிலை கடத்தல் தொடர்பாக ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நேற்று அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

    சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவிலில் இருந்து ஏராளமான சிலைகள் திருடப்பட்டு, பின்னர் கடத்திச் செல்லப்பட்டு இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடத்திச் சென்று விற்கப்பட்ட ராஜராஜ சோழன் ஐம்பொன் சிலையும், அவரது பட்டத்து ராணி லோகமாதேவி ஐம்பொன் சிலையும் குஜராத் மாநிலத்தில் உள்ள மியூசியத்தில் இருந்து மீட்கப்பட்டு சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது.

    தஞ்சை பெரிய கோவிலில் இருந்து மேலும் பல சிலைகள் திருடப்பட்ட விவரம் கண்டறியப்பட்டுள்ளது. ராஜராஜ சோழனின் தமக்கை குந்தவை பிராட்டியார், 2 உமாபரமேஸ்வரி சிலைகளை தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்துள்ளார். ராஜராஜ சோழனின் தந்தை பொன் மாளிகை துஞ்சின தேவர் சிலை, ராஜராஜ சோழனின் தாயார் வானவன்மாதேவியின் சிலை போன்றவையும் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து திருடப்பட்டுள்ளது. இந்த இரண்டு சிலைகளுக்கும் தினமும் அபிஷேகம் செய்ய ராஜராஜ சோழன் கட்டளையிட்டு இருந்தார். அதன்படி, இந்த இரண்டு சிலைகளுக்கும் தினமும் பெரிய கோவிலில் அபிஷேகம் நடக்குமாம்.

    ராஜராஜ சோழனின் தாயார் வானவன்மாதேவி, திருக்கோவிலூர் மலையமான் சிற்றரசரின் மகள் ஆவார். ராஜராஜ சோழனின் தளபதி 3 அடி உயரத்தில் அர்த்தநாரீஸ்வரர் ஐம்பொன் சிலையை தஞ்சை பெரிய கோவிலுக்கு பரிசாக கொடுத்துள்ளார். அந்த சிலையையும் காணவில்லை. திருட்டு போயுள்ளது.

    மேலும் ராஜராஜ சோழன் 450 கிராம் எடையுள்ள தங்கத்தால் செய்யப்பட்ட கொல்கைதேவர் சிலையையும் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்துள்ளார். மேலும் வெள்ளியினால் செய்யப்பட்ட 4 வாசுதேவர் சிலைகளும், 365 கிராம் எடையுள்ள தங்கத்தால் செய்யப்பட்ட சேத்திரபாலர் சிலையும் தஞ்சை பெரிய கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட இரண்டு தங்கத்திலான சிலைகளும், 4 வெள்ளி சிலைகளும் திருடப்பட்டுள்ளது. இவ்வாறு திருடப்பட்டுள்ள அனைத்து சிலைகளும் வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டு பல கோடிக்கு விற்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட சிலைகளை சட்டப்பூர்வ நடவடிக்கை மூலம் மீட்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும்.

    இந்த சிலைகள் தஞ்சை கபிஸ்தலத்திற்கு அருகே உள்ள சருக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ் பகதூர் சீனிவாச கோபாலாச்சாரி என்பவர் மூலமாக கோடிக்கணக்கில் விற்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் விற்ற பணத்தில் சென்னை வேப்பேரியில் கூட 7 கிரவுண்டு நிலம் வாங்கப்பட்டுள்ளது. அதுபற்றியெல்லாம் புலன் விசாரணை தீவிரமாக மேற்கொண்டுள்ளோம். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரும் இன்னும் கைது செய்யவில்லை.

    இதுபோல தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்திச் சென்று விற்கப்பட்டுள்ளது. அனைத்து சிலைகளையும் மீட்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×