search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேலும் ஒரு ஆடியோ - பெண் போலீஸ் உயர் அதிகாரிகளை திட்டித்தீர்த்த இன்ஸ்பெக்டர்
    X

    மேலும் ஒரு ஆடியோ - பெண் போலீஸ் உயர் அதிகாரிகளை திட்டித்தீர்த்த இன்ஸ்பெக்டர்

    சென்னையில் பெண் போலீஸ் உயர் அதிகாரிகளை இன்ஸ்பெக்டர் ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டித்தீர்த்த விவகாரம், மேலும் ஒரு ஆடியோ பேச்சு மூலம் கடும் புயலை கிளப்பியுள்ளது. #TNPolice
    சென்னை:

    ஏற்கனவே ஆடியோ பேச்சு விவகாரத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ள உதவி கமிஷனர் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை தேனாம்பேட்டை உதவி கமிஷனர் முத்தழகு நேற்று முன்தினம் இரவு மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டார். நேற்று அவர் மீண்டும் மாற்றப்பட்டார். டி.ஜி.பி. அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் அவர் இருப்பார் என்று டி.ஜி.பி. அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார்.

    அடுத்தடுத்து இந்த மாற்றங்களைச் சந்தித்த உதவி கமிஷனர் முத்தழகு ஆடியோ பேச்சு விவகாரத்தால்தான் இந்த சிக்கலில் சிக்கினார். அவர் குற்றவாளி ஒருவரை காப்பாற்றுவதற்காக பணம் கேட்டு பேரம் பேசியது போன்ற ஆடியோ பேச்சு நேற்று முன்தினம் இரவு ‘வாட்ஸ்-அப்’ மூலம் வெளியானது.

    சமீபத்தில் தேனாம்பேட்டை நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த ராக்கெட் ராஜா துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகள் சுந்தர், ராஜ்சுந்தர், பிரகாஷ் உள்ளிட்ட 4 பேரும் தேனாம்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதில் கைதான குற்றவாளி ஒருவரின் தம்பியிடம் உதவி கமிஷனர் முத்தழகு பணம் கேட்டு பேரம் பேசுவதுபோல, ‘வாட்ஸ்-அப்’பில் வெளியான ஆடியோ பேச்சில் தகவல் வெளியானது.

    குறிப்பிட்ட குற்றவாளிமீது கோவையில் ரூ.60 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்வேன் என்றும், கைது செய்யாமல் இருக்க பெரிய அளவில் தனக்கு தொகை வேண்டும் என்றும், தனக்கு பெரிய அளவில் பணப்பிரச்சினை இருப்பதாகவும் உதவி கமிஷனர் பேசுகிறார்.

    அதற்குப்பதில் அளித்த குற்றவாளியின் தம்பி முதலில் ரூ.3 லட்சம் தருவதாக சொல்கிறார். அதற்கு உதவி கமிஷனர் சம்மதிக்கவில்லை. அதற்கு அடுத்து ரூ.5 லட்சம் தருவதாக சொல்கிறார். அது ‘டீ’ செலவுக்குக்கூட பத்தாது என்று உதவி கமிஷனர் கூறுகிறார்.

    பெரிய அளவில் தொகையை எடுத்துக்கொண்டு சென்னைக்கு வரவேண்டும் என்றும், சென்னையில் தனது அலுவலகத்திற்கு வரக்கூடாது என்றும், அண்ணாநகருக்கு வரும்படியும் உதவி கமிஷனர் ஆடியோ பேச்சில் சொல்கிறார். அதற்கு குற்றவாளியின் தம்பியும் சம்மதம் தெரிவிக்கிறார்.

    இந்த ஆடியோ பேச்சின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன் எதிரொலியாகவே நேற்று முன்தினம் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட முத்தழகு, நேற்று காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

    ஆடியோ பேச்சு விவகாரத்தால் சிக்கலில் மாட்டியுள்ள உதவி கமிஷனர் முத்தழகுவிடம் இதுபற்றி கேட்டபோது, அவர் கூறியதாவது:-


    ஆடியோ பேச்சில் உள்ள குரல் என்னுடைய குரல் அல்ல, தேனாம்பேட்டை நட்சத்திர ஓட்டலில் ராக்கெட் ராஜாவோடு கைது செய்யப்பட்ட அவரது கூட்டாளிகள் 4 பேரையும் குண்டர் சட்டத்தின்கீழ் 1 ஆண்டு சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனருக்கு நான்தான் சிபாரிசு செய்தேன்.

    ராக்கெட் ராஜாவோடு தங்கியிருந்த அவர்களை கைது செய்ததும் நான்தான். தென்மாவட்ட போலீசார்கூட, அவர்களை கைது செய்ய முடியவில்லை. நான் பணம்கேட்டு, பேரம் பேசியிருந்தால் அவர்களை ஏன் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சிபாரிசு செய்ய வேண்டும்? ஆடியோ பேச்சு விவகாரம் முழுக்க முழுக்க தவறானது, எனக்கு எதிரானவர்கள் அந்த பிரச்சினையை பெரிதாக்கிவிட்டார்கள். என்னை மத்திய குற்றப்பிரிவுக்குத்தான் மாற்றி உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உதவி கமிஷனர் முத்தழகு பிரச்சினை முடிவுக்கு வருவதற்குள் சென்னை போலீசில் இன்னொரு ஆடியோ பேச்சு விவகாரம் புயலை கிளப்பியுள்ளது. 2 பெண் போலீஸ் உயர் அதிகாரிகளை இன்ஸ்பெக்டர் ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்ப்பது, அந்த ஆடியோ பேச்சில் உள்ளது. குற்றவாளி ஒருவருக்கு சாதகமாக பேசும் அந்த இன்ஸ்பெக்டர் பெண் போலீஸ் உயர் அதிகாரிகளை மிகவும் இழிவாக பேசி உள்ளார்.

    இன்ஸ்பெக்டர் பேசிய பேச்சு தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் உயர் அதிகாரிகளிடமே புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் அலுவலக உயர் அதிகாரிகளிடமும் அந்த இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிக்கு பரிந்து பேசும் அந்த இன்ஸ்பெக்டரை குறிப்பிட்ட வழக்கில் இருந்து மாற்றி அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

    கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் இன்ஸ்பெக்டர் பேசிய பேச்சை ஆடியோவாக ‘வாட்ஸ்-அப்’பில் வெளியிடுவோம் என்று புகார்தாரர்கள் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக இதுபோன்ற வாட்ஸ்-அப்பில் வெளியாகும் ஆடியோ பேச்சுக்களும், வீடியோ காட்சிகளும் தமிழக போலீஸ் துறையையே உலுக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #TNPolice
    Next Story
    ×