search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா ஊழல் தொடர்பாக டெல்லி சிபிஐ விசாரணை நடத்தும் - ஆவணங்கள் ஒப்படைப்பு
    X

    குட்கா ஊழல் தொடர்பாக டெல்லி சிபிஐ விசாரணை நடத்தும் - ஆவணங்கள் ஒப்படைப்பு

    குட்கா ஊழல் தொடர்பாக டெல்லி சிபிஐ விசாரணை நடத்த உள்ளது. இது தொடர்பான ஆவணங்களை தமிழக அரசு ஒப்படைக்க உள்ளது. #GutkhaCase #GutkhaScam

    சென்னை:

    தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    என்றாலும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் தடையை மீறி குட்கா விற்பனை நடந்து வருகிறது.

    குட்கா விற்பனை செய்வதற்கு போலீஸ் உயர் அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் குட்கா தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெறும் அதிகாரிகள் யார் என்பது தெரியாமல் இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை செங்குன்றத்தில் உள்ள சில குடோன்களிலும், குட்கா தயாரிப்பாளர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையின் போது ரகசிய டைரி ஒன்று வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது.

    அந்த டைரியில் தமிழ் நாட்டில் குட்காவை தங்கு தடையின்றி விற்பனை செய்ய அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்ட தகவல்கள் இடம் பெற்றிருந்தன. எந்தெந்த அதிகாரிகளுக்கு, எவ்வளவு பணம், எந்த தேதியில் கொடுக்கப்பட்டது என்பது முழுமையாக அந்த டைரியில் இருந்தது. சென்னை முன்னாள் கமி‌ஷனர் ஒருவர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தன்று அடுத்தடுத்து 2 தடவை தலா ரூ.15 லட்சம் லஞ்சம் பெற்றிருப்பதும் அந்த டைரி தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    அமைச்சர், 2 போலீஸ் உயர் அதிகாரிகள் பெயரும் அதில் இருந்தது. இதையடுத்து லஞ்சம் வாங்கிய அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு வருமான வரித்துறை கடிதம் அனுப்பியது.

    தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.க்கு வருமான வரித்துறை கடிதங்களை அனுப்பியது. ஆனால் தமிழக அரசு அத்தகைய கடிதம் எதுவும் வரவில்லை என்று மறுத்தது. எனினும் அப்போதைய தலைமை செயலாளர் ராமமோகனராவ் கடிதம் வந்ததை ஒத்துக் கொண்டார்.


    இதையடுத்து குட்கா ஊழல், லஞ்ச விவகாரம் பற்றி உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. உடனே தமிழக அரசு, அது தொடர்பான ஆவணங்கள் தொலைந்து விட்டதாக கூறியது. இதை அறிந்த வருமான வரித்துறை மீண்டும் அந்த டைரி தகவல்களை அனுப்பியது.

    நீண்ட இழுபறிக்குப் பிறகு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குட்கா ஊழல் பற்றி வழக்கு பதிவு செய்தனர். அதில் உயர் அதிகாரிகளின் பெயர்கள் விடுபட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதன் காரணமாக குட்கா வழக்கில் தீவிர விசாரணை நடக்கவில்லை.

    இதனால் 6 மாதத்துக்குள் இந்த வழக்கில் மாநில லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் குற்றப்பத்திரிகையை சமர்ப்பிக்க இயலவில்லை. இதைத் தொடர்ந்து குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதை வலியுறுத்தி தி.மு.க. சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    சென்னை ஐகோர்ட்டு அந்த வழக்கை விசாரித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்தது.

    இதைத் தொடர்ந்து தமிழக எதிர்க்கட்சிகள் புதிய கோரிக்கை ஒன்றை முன்வைத்தன. குட்கா ஊழல் வழக்கில் அமைச்சர் மற்றும் 2 போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருப்பதால், அந்த விசாரணையை தமிழ்நாட்டுக்கு வெளியில் உள்ள சி.பி.ஐ. அமைப்பு மூலம் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தன. இதை சி.பி.ஐ. மேலிடம ஏற்றுக் கொண்டது.

    டெல்லி சி.பி.ஐ.யின் லஞ்ச ஒழிப்புத் துறை மூன்றாவது பிரிவு குட்கா ஊழலை விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சி.பி.ஐ. குழுவுக்கு நாடெங்கும் சென்று விசாரணை நடத்தும் அதிகார எல்லை வரம்பு இருக்கிறது.


    அதன் அடிப்படையில் குட்கா ஊழல் பற்றி விசாரிக்கும் பொறுப்பை டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்றனர். கடந்த வாரம் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் குழு சென்னை வந்து விசாரணையைத் தொடங்கியது.

    குட்கா ஊழல் தொடர்பான முதல் தகவல் அறிக்கை ஆவணத்தை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இருந்து டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் பெற்றனர். அதன் அடிப்படையில் டெல்லி சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்யும்.

    மாநில லஞ்ச ஒழிப்புத் துறையினர், குட்கா விற்பனைக்கு லஞ்சம் பெற்றதாக 17 கீழ்மட்ட அதிகாரிகள் பெயர்களை மட்டுமே முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்திருந்தது. ஆனால் சி.பி.ஐ. அதிகாரிகள் தாங்கள் பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கையில் சர்ச்சைக்குரிய உயர் போலீஸ் அதிகாரிகளின் பெயர்களை இடம் பெற செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன் பிறகு இந்த வழக்கு விசாரணை தீவிரமாகும். இதற்கிடையே குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் தருமாறு தமிழக அரசிடம் டெல்லி சி.பி.ஐ. கேட்டுள்ளது.

    டெல்லி சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ததும், அந்த ஆவணங்கள் கை மாறும் என்று தெரிய வந்துள்ளது. அதன் பிறகு குட்கா விற்பதற்கு லஞ்சம் வாங்கிய உயர் போலீஸ் அதிகாரிகள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. #GutkhaCase #GutkhaScam

    Next Story
    ×