search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: பண்ணை கூரை சரிந்ததில் 650 கோழிகள் பலி
    X

    சேலம் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: பண்ணை கூரை சரிந்ததில் 650 கோழிகள் பலி

    சேலம் மாவட்டத்தில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. கோழிப்பண்ணை கூரை சரிந்ததில் 650 கோழிகள் இறந்தது.
    தலைவாசல்:

    சேலம் மாநகரில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது. அவ்வப்போது லேசாக மழை பெய்தது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அப்போது வாகன ஓட்டிகள் பலர் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு செல்வதை பார்க்க முடிந்தது. பின்னர் சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. மேலும் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. மாநகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியுற்றனர். இதுதவிர சேலம் சத்திரம் சீத்தாராமன் செட்டி சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குளம்போல் தேங்கி நின்றது.

    இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. தலைவாசல் பட்டுதுறை, மணிவிழுந்தான், சிறுவாச்சூர், வரகூர், புத்தூர், ஊனத்தூர், சார்வாய், சாமியார் கிணறு, காட்டுக்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

    மணிவிழுந்தான் வடக்கு கிராமத்தை சேர்ந்த விவசாயி சின்னசாமி தோட்டத்தில் உள்ள கோழிப்பண்ணை கூரை சூறைக்காற்றுக்கு சரிந்து விழுந்தது. இதில் 650 கோழிகள் செத்தன. மேலும் பல இடங்களில் குடிசைகள் காற்றுக்கு சரிந்து விழுந்தன. இதேபோல் மரங்களும் ஆங்காங்கே சாய்ந்து விழுந்தன.

    ஏற்காட்டில் நேற்று மதியம் முதல் சாரல் மழை பெய்தது. மாலையில் கனமழை பெய்தது. பின்னர் இரவில் மழை தூறிக்கொண்டே இருந்தது. கருப்பூர் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் அங்கு அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியுற்றனர்.


    Next Story
    ×