search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் மேலும் 2 முக்கிய வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
    X

    சென்னையில் மேலும் 2 முக்கிய வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    சென்னையில் இன்று மேலும் இரண்டு முக்கிய வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். #ChennaiMetro #CMOpenMetro
    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் ரூ.20 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இத்திட்டம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதல் கட்டமாக நிறைவேற்றப்படுகிறது.

    வண்ணாரப்பேட்டை- சென்ட்ரல்- கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரை ஒரு வழியாகவும், சென்ட்ரலில் இருந்து தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை மார்க்கமாக மற்றொரு வழியாகவும் செயல்படுத்தப்படுகிறது.

    உயர்மட்டப்பாதை மற்றும் சுரங்கப்பாதை என 2 வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த மெட்ரோ ரெயில் திட்டம் முதன் முதலாக கோயம்பேடு- அசோக்நகர் இடையே தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து சின்னமலை- விமான நிலையம் இடையே இயக்கப்பட்டது.

    3-வது கட்டமாக முழுவதும் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது. நேரு பூங்கா-திருமங்கலம் இடையே கடந்த ஆண்டு சேவை தொடங்கப்பட்டது. தற்போது நேரு பூங்காவில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை நடைப்பெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேரு பூங்கா-எழும்பூர்-சென்ட்ரல் சுரங்கப்பாதை பணிகள் நிறைவுற்று பயணிகள் சேவை தொடங்குவதற்கு தயாராக்கப்பட்டன. அதே போல சைதாப்பேட்டை- தேனாம்பேட்டை ஏ,ஜி. டி.எம்.எஸ். இடையே பணிகள் நிறைவடைந்து பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இதனைத்தொடர்ந்து இந்த 2 வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க மெட்ரோ ரெயில் நிறுவனம் ஒப்புதல் அளித்தது.

    இதையொட்டி எழும்பூர்- சென்ட்ரல் மற்றும் சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழா இன்று நடந்தது.


    எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார்.

    பின்னர் சுரங்கப்பாதை யில் எழும்பூர்- சென்ட்ரல் மெட்ரோ ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்து அதில் பயணம் செய்தார். அவருடன் அமைச்சர்களும் சென்றார்கள்.

    விழாவில் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எம்.சி.சம்பத் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், துறை செயலாளர்கள் துர்கா சங்கர் மிஷ்ரா, பங்கஜ் குமார் பன்சல், டி.வி.சோமநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சென்ட்ரல்-நேரு பூங்கா இடையே புதிய சேவை தொடங்கப்பட்டதால் இனி சென்ட்ரலில் இருந்து நேரடியாக மீனம்பாக்கத்திற்கு செல்ல முடியும். #ChennaiMetro #CMOpenMetro
    Next Story
    ×