search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கோடை மழை
    X

    ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கோடை மழை

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கோடை மழை பெய்து வருவதால் விவாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக பவானி, கோபி, தாளவாடி, அந்தியூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த பகுதியில் குளங்கள், நீர்நிலைகள் நிரம்பி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில் கோபி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நேற்று சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் நூற்றுக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தது. பல கிராமங்களில் மின்தடையும் ஏற்பட்டது.

    இதே போன்று சென்னிமலை, அம்மாபேட்டை, ஆப்பக்கூடல், கொடிவேரி, மொடக்குறிச்சி போன்ற பகுதியில் இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. இதனால் பல கிராமங்கள் இருளில் மூழ்கின.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு.-

    வரட்டுப்பள்ளம் -27.2
    அம்மாபேட்டை -22.4
    பவானிசாகர் -11.2
    நம்பியூர் -4.8
    பெருந்துறை -2.1
    ஈரோடு -2

    பவானிசாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீரின் மட்டம் 50.24 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 673 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
    Next Story
    ×