search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் தனியார் வங்கி இன்சூரன்ஸ் அலுவலகத்தில் தீ விபத்து
    X

    மதுரையில் தனியார் வங்கி இன்சூரன்ஸ் அலுவலகத்தில் தீ விபத்து

    தனியார் வங்கி இன்சூரன்ஸ் அலுவலகத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின. தீயை அணைக்க வீரர்கள் தீவிர பணியில் ஈடுபட்டனர்.
    மதுரை:

    மதுரை கே.கே.நகர் 100 அடி ரோட்டில் பிரபல வணிக வளாகம் அருகே உள்ள கட்டிடத்தில் 2-வது மாடியில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் இன்சூரன்ஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்தில் இன்று காலை 8 மணியளவில் தீப்பிடித்தது. இதனால் பெரிய அளவில் கரும்புகை வெளியேறியது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக 3 வண்டிகளில் வந்த தீயணைப்பு படையினர் ராட்சத ஏணியை பயன்படுத்தி 2-வது மாடிக்கு சென்று தண்ணீரை பீய்ச்சி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் நேரம், ஆக... ஆக... அங்குள்ள அலுவலகம் முழுவதும் தீப்பிடித்ததால் கரும்புகை சூழ்ந்தது. இதனால் தீயை அணைப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. ஆனாலும் 30-க்கும் மேற்பட்ட தீயணைக்கும் வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    ஆனாலும் புகை மண்டலம் இன்னும் இருப்பதால் தொடர்ந்து தீயணைப்பு படையினர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த தீ விபத்து காரணமாக இன்சூரன்ஸ் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், டேபிள், சேர் உள்ளிட்ட பர்னிச்சர் வகைகள் தீயில் எரிந்து சாம்பலாயின. இதுதொடர்பாக அண்ணாநகர் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.


    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காலை நேரம் என்பதால் அலுவலகத்தில் பணியாளர்கள் யாரும் இல்லை. இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    2 மணி நேரமாக தீ பிடித்ததால் அங்குள்ள சேத மதிப்பு இன்னும் மதிப்பிடப்படவில்லை. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் உள்ள கட்டிடம் தீ பிடித்து எரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பொதுமக்களும் ஏராளமானோர் திரண்டு தீயை அணைக்கும் பணிக்கு உதவினர். தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. #Tamilnews
    Next Story
    ×