search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடலூர் பகுதியில் அகற்றப்படாத குப்பையால் நோய் பரவும் அபாயம்
    X

    கூடலூர் பகுதியில் அகற்றப்படாத குப்பையால் நோய் பரவும் அபாயம்

    கூடலூர் பகுதியில் அகற்றப்படாத குப்பையால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கூடலூர்:

    கூடலூர் நகராட்சி பகுதியில், பொதுமக்கள் பயன்படுத்திய குப்பை கழிவுகள், கழிவுப் பொருட்கள், தெருக்களில் இருந்து அள்ளப்படும் சாக்கடை கழிவுகள், இறைச்சிக்கழிவு, காய்கறி கழிவுகள் அனைத்தும் துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காகுப்பை என தரம் பிரித்து நகராட்சி டிராக்டர், மற்றும் மூன்று சக்கர சைக்கிள்களில் எடுத்துச் சென்று பெத்துக்குளம் பகுதியிலுள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி வந்தனர்.

    சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு காலியிடமாகக் கிடந்த பெத்துக்குளம் சுற்றுப்பகுதி தற்போது காந்திகிராமம், சவுடம்மன் கோவில் தெருப்பகுதி, புதுக்குளம் முருகன் கோவில் பகுதி என குடியிருப்புப் பகுதிகளாக மாறியுள்ளது. பலஆண்டுகளாக கொட்டப்பட்ட குப்பை கழிவுகள் இங்கு மலைபோல் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

    எனவே குப்பை கிடங்கை மாற்ற கோரி பொதுமக்கள் தொடர் போராட்டம் செய்ததால் நகராட்சி அதிகாரிகள் கூடலூர் பெருமாள்கோவில் புலம் பகுதியில் குப்பை கொட்டும் வகையில் 5 ஏக்கர் தரிசுநிலத்தை தேர்வு செய்தனர். ஆனால் இப்பகுதியில் குப்பை கொட்டினால் விளைநிலங்கள் மாசுபடும்.

    பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குப்பை கழிவுகள் கம்பம் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது.

    கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழைபெய்து வருவதால் குப்பை கிடங்கிற்கு உள்ளே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கூடலூரிலிருந்து கம்பத்தில் கொண்டுவந்து குப்பைகள் கொட்ட கம்பம் நகராட்சி அனுமதி மறுத்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக கூடலூர் நகர் பகுதியில் சேகரமாகி உள்ள குப்பைக்கழிவுகள் அகற்றப்படாமல் கிடக்கிறது. இதனால் தெருப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதோடு நோய்பரவும் அபாயமும் ஏற்பட்டள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் இவ்வி‌ஷயத்தில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×